பக்கம்:நூறாசிரியம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

நூறாசிரியம்

வாடைக்காற்றைப் போன்றது. இவற்றால் யாம் வாழும் வாழ்வோ, குளிர் பொருந்தி வலிந்த இருளால் முயங்கப் பெற்ற கூரை கூனிய தாழ்ந்த குடிலுள், ஈரங்கசிந்த ஒதத்துள், உடல் போர்த்தப் பற்றாத ஒரு முழத்துணியை முன்னும் பின்னும் இழுத்திழுத்துப் போர்த்தி வருந்திக் கிடக்கும் தன்மை போன்றது. எமக்குற்ற உறவினர்களோ பொருளுக்கெனக் கைகளை அகன்று ஏந்தி, அது நிறையா விடத்துப் பலவாறு குறை கூறிக் காய்கின்ற தன்மையினர். எம் அயலகத்தாரோ, தம் மனையில் தாளிதம் செய்யும் மணப் புகை தானும் பிறமனையுட் புகாவண்ணம், தம் திறந்த கதவம் தாழால் நெருங்க முடுக்கும் இயல்பை உடையவர். யாம் வாழும் ஊரோ, தம்மை ஆளுகின்றார்ப் பற்றிக் கவலாது பெருமையைப் பொடியாக்கும் சிறுமைத்து. இவை தமக்கிடையில் எம் உயிர், போகின்ற வழி அறியாத ஆற்று நீரின் தெப்பத்தைப் போன்றது.

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

தம் மனமும் அது கொண்ட விழைவும், அவ்விழைவு புரக்கும் குடும்பமும் அக் குடும்பு பெற்ற வறுமையும், அவ் வறுமை தாக்கும் கொடுமையும், அக்கொடுமை மிகுக்கும் உறவும், அவ்வுறவு சார்ந்த அயலும், அவ்வயல் நிரம்பிய ஊரும், அவ்வூர் நிரம்பிய மக்களும், அம்மக்களிடை தம் உயிர் செல்லும் செலவும் கூறுவதாக அமைந்ததிப் பாட்டு,

உயிர் பற்றுக் கோடாகக் கொள்வது மனத்தையே ஆகலின் மனவுணர்வு முதற்கண் கூறப்பெற்றது. - மனம் வேட்கையுறாது பற்றற்றிருக்கும் அளவை, அது தானுற்ற புறவாழ்க்கைக்கு வேண்டிய உலகியற் பொருள்மேல் அவாவுதலின் தன்மைவழிக் காட்டப் பெற்றது.

விழைவு - மனத்தேவை. வேண்டல்- புறத்தேவை. புறப்பொருளை அவாவுதலையே 'வேண்டுதல்' என்று வள்ளுவரும் குறித்தார். புறத்தேவையினும் அகத்தேவை குறைந்து நிற்றலே, மெய்யுணர்வு மிகுக்க வழி செய்யுமாகலின், விழைவே வேண்டலின் நனிகுறை வினதே எனக் கூறலாயிற்று.

பிழைப்பு- உலகியல் வாழ்வு உயர்வையே குறித்த ஒழுக்கம், நாற்றம், காமம் முதலிய சொற்கள் தீயொழுக்கம், தீநாற்றம், இழிகாமம் எனக் கீழ்மைப் பொருள்களுக்கும் ஒட்டிவரத் தொடங்கிய இழிந்த நிலையில், கெடுதல், தவிர்தல், தவறல் முதலிய இழிநிலைப் பொருள்களே பெறும் பிழைப்பு என்ற சொல்லும் உலகியல் வாழ்வைக் குறிக்கும் ஓர் உயர்ந்த சொல்லாக உயர்வு பெற்றது.

பிழையின்றி உலக வாழ்வியலா நிலையில், பிழைப்பே வாழ்வு என்னும் பொருள் பெற்றது. எனவே, உலக வாழ்வியலைக் குறிக்க இச் சொல்லே கையாளப் பெற்றது. இச்சொற்பொருள் அண்மைக் காலத்தது.