பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
109
 


ஆனால் கமலக்கண்ணனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று மாயாதேவி போன்ற நட்சத்திரங்கள். வெண்ணெய்கண்ணனார் போன்ற புலவர்கள், சர்மா போன்ற சோதிடர்கள் பிரகாசம், கலைச்செழியன் போன்ற சாதுரியக்காரர்கள், எல்லோரும் அயராமல் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். எந்தக் கூட்டத்திலும் அபேட்சகராகிய கமலக்கண்ணன் அதிகம் பேசவில்லை. மற்றவர்கள் அவரை மேடையில் அமர்த்தி வைத்துக்கொண்டு பேசினார்கள். இறுதியில் நாடகத்தின் கடைசிக் காட்சி போல் அவரும் எழுந்து ‘மைக்’ முன்வந்து “பொது மக்களே! உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். எனக்கு வாழ்க்கையில் சகலவிதமான வசதிகள் இருந்தும் பொது மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற ஒரே ஆசைக்காகத் தான் இப்படித் தேர்தலில் நிற்கிறேன். வேறு சிலரைப்போல் ஒரு பதவியை அடைந்து அந்தச் செல்வாக்கின் மூலம்தான் பணமும், புகழும் சேர்க்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்குக் கிடையாது. வசதிகளை உடைய நான் ஏன் சிரமப்பட முன் வருகிறேன் என்பதை நீங்கள் நன்கு சிந்திக்கவேண்டும்”—என்று விளக்கி யாவரும் தமக்கேவாக்களிக்க வேண்டுமெனக்கோருவதோடு கூட்டங்கள் முடியும்.

தேர்தல் நாள் நெருங்க நெருங்கக் கமலக்கண்ணனின் தொகுதியிலுள்ள ஸ்லம், சேரி, குடிசை வாழ்பெருமக்களின் கோட்டைகளைப் பற்றிய பிரச்சினை தலையெடுத்தது. “நூறு குடிசைங்க நான் இன்னா சொல்றேனோ அப்பிடியே ஒட்டுப் போடும் சார்! நம்பகிட்ட பொறுப்பா வுட்டுடுசார்! அத்தினி ஒட்டும் தானா உனக்கே விழுந்துடும்”—என்று ஒர் தலை சீவாத ஆள் கழுத்தில் கைக்குட்டையைச் சுற்றுவதும் கழற்றுவதுமாகச் சேட்டை செய்து கொண்டே பேரம் பேசினான். அதுவரை அப்படிப் பத்து. ஆட்களைச் சந்தித்திருந்தார் கமலக்கண்ணன். ஒவ்வொரு வரும் குறைந்தபட்சம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் முன் பணமாகக் கேட்பதற்குத் தவறவில்லை. “அத்தினி ஸ்லம் ஒட்டும் லாட்டா விழறாப்ல பண்றேன் சார்! மூவா-