பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

நெஞ்சக்கனல்


‘ப்ரோகிராம்’ மட்டும் ஒத்துக்குங்க. சும்மா ‘பட்டாணிக் கடலை’க் கூட்டம்லாம் வேண்டவே வேண்டாம். நாம இப்ப இதிலே இருந்தாலும் பரம்பரை பரம்பரையா நம்ம இப்ப வழக்கப்படி– பழைய ஜஸ்டிஸ் கட்சி சம்பந்தமான ஆட்களும் இங்கே தேடி வருவாங்க. அவங்களையும் முகஞ் சுளிக்காமே திருப்திப்படுத்தி அனுப்பனும்.”

அந்தர்ங்கக்காரியதரிசி பெருமாள்கோவில் மாடுமாதிரி தலையை ஆட்டிவைத்தார். தினசரி செக்ரடேரியட் போவதுல் பைல் பார்ப்பதும், செகரட்டரி, டெபுடிசெகரட்டரிகளை ஆளுவதும் பெருமையாகத்தான் இருந்தன. அந்தப் பெருமைக்கும், பதவியின் புகழுக்கும் இடையே அவர் அஞ்சி நடுங்க வேண்டிய பலவீனங்களும் இருந்தன.

பதவி ஏற்ற மறு மாதமே புதிய பட்ஜெட்டை அவர் தயாரித்தளிக்க வேண்டியிருந்தது. திறப்புவிழா, தொடக்கவுரை, தலைமையுரை, முதலியவற்றுக்காக அலைந்து திரி வதைக் குறைத்துக்கொண்டு பட்ஜெட்டுக்காக அவர்காரிய தரிசிகளுடனும் பொருளாதார ஆலோசகர்களுடனும் நேரத்தைக் கழித்துக்கொண்டிருந்த சமயத்தில்–செக்ரட் டேரியட்டில் இருந்து களைப்பாகவும் அலுப்பாகவும் வீடு திரும்பிய மாலை வேளை ஒன்றிலே முற்றிலும் எதிர்பாராத மூலையிலிருந்து ஒரு பயமுறுத்தல் அவரை நெருங்கியது.

வரவேற்பு அறையிலே உட்கார்ந்து மாலைத் தினசரி ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார் அவர் வேர்க்க–விறு விறுக்கக் கலைச்செழியன் எங்கிருந்தோ வந்துசேர்ந்தான். அவன் கையில் ஏதோ இரண்டாக மடித்த பத்திரிகை ஒன்றிருந்தது. முகத்தில் பதற்றமும் பரபரப்பும் தெரிந்தன.

“என்ன சமாசாரம்? நான் ரொம்ப பிஸி. ‘பட்ஜெட்’ வேலைகள் ஏராளமா இருக்கு...நீ இன்னொரு நாள் வாயேன்...” என்று அவனைத் தட்டிக்கழிக்க முயன்றார் அவர். இப்போதெல்லாம் அவனைப் பார்த்தாலே எரிச்சலாக இருந்தது அவருக்கு. அவனோ பதறினான். அவன் குரல் கூசிக் கூசி வந்தது.