பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

45


சாப்பாட்டிற்குப்பின் மனைவியோடு அமர்ந்து சிறிது நேரம் செஸ் விளையாடினார். பின்பு அவள் துப்பறியும் நாவல் படிக்கப்போய்விடவே அவர் தீராத தாகத்துடன் தமது பிரத்யேக அறையில்நுழைந்தார். உள்ளே அழகிய சிறிய வட்டமேஜையின்மேல் எல்லாம் இருந்தன. விதவிதமான வடிவமுடைய கிளாஸ்கள், கலந்துகொள்ளசோடா, மதுபான வகைகள் எல்லாம் இருந்தன. ‘பெர்மிட்’ சிறிய அளவுக்கானாலும் இத்தகைய ருசிகளில் பஞ்சம் ஏற்படும் படி விடுவதில்லை அவர். குடிக்கிற நேரங்களில் மட்டும் இடையிடையே புகைப்பதற்கு சிகரெட் போதாது அவருக்கு. அப்போது மட்டும் நல்ல காரமான சுருட்டுகள் அல்லது ஸ்பென்சர் ஸிகார்ஸ் வேண்டும் அவருக்கு. இந்தப் பழக்கங்கள் எல்லாம் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாகவந்து விட்டவை. சிலசந்தர்ப்பங்களில் பெரியமனிதத்தன்மையை இவற்றாலும்தான் நிரூபித்துக்கொள்ள நேரிடுகிறது. சுக போகங்களைத் தவிர வேறு எவற்றின் மேலும் அதிகமான பக்தி செலுத்தியிராத ஒரு குடும்பம் அது. அப்படிப்பட்ட போகங்களில் ஒன்றை அடையத் தொடங்கியபின் இரவும் பகலும் கூடத் தெரியாமல் போய்விடுவது இயல்புதானே?

மறுநாள்காலை விடிந்ததும்– விடியாததுமாகத்தமிழ்த் தினசரியைத் தேடிப்பிடித்து வாங்கிவரச்சொல்லி அதன் முகத்தில் தான் விழித்தார் கமலக்கண்ணன். அவர் காந்திய சமதர்ம சேவாசங்கத்தில் பேசிய பேச்சு– புகைப்படம் எல்லாம் அதில் வெளிவந்திருந்தன. ஆனால் அவர் நல்ல அர்த்தத்தில் நல்ல வாக்கியத்தில் விளக்கியிருந்த ஒரு கருத்துக்கு ‘பெண்கள் வரவர மோசமாகிவிட்டார்களே!– பிரமுகர் கமலக்கண்ணன் வருத்தம்’ என்று ஒரு தினுசான மஞ்சள் கவர்ச்சியுடன் நாலுகாலம் தலைப்புக்கொடுக்கப்பட்டிருந்தது. முதல்நாள் இரவு காரில் திரும்பும்போது இந்தப் பத்திரிகையை நடத்துகிறவர் நீண்ட நாட்களுக்குமுன் கள்ளுக்கடை வைத்திருந்ததாக அந்த நிருபர் கூறியதை நினைவுகூர்ந்தார் கமலக்கண்ணன். கள்ளிலிருந்து பத்திரிகைவரை எதைவிற்றாலும் வாங்குகிறவர்களைப்போதை