பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
61
 


மறுநாள் காலை ஒரு முக்கியமான உத்தியோகப்பிரமுகர் கமலக்கண்ணனைத் தேடிவந்தார். தன்னுடைய மகள் பரத நாட்டியம் பயின்று வருவதாகவும், அதற்கு அரங்கேற்றத் தேதி பார்த்திருப்பதாகவும் கமலக்கண்ணனே தலைமை வகித்து நடத்தித் தரவேண்டும் என்றும் அவர் விரும்பினார் நகரில் இரண்டு மூன்று முக்கியமான சங்கீத நாடக சபாக்களுக்குக் கமலக்கண்ணனே கெளரவத் தலைவராக இருந்து வந்ததனால் அவரைத் தலைவராகப் போட்டு அரங்கேற்றுவதனால் பின்னால் பல பயன்களை எதிர் பார்த்தார் அந்த உத்தியோகப் பிரமுகர்.

“பரத நாட்டியத்தைப்பத்தி எனக்கென்னத்தைத் தெரியும்? வேறெ யாராச்சும் பெரியவங்களாக் கலை ஞானமும் கொஞ்சம் உள்ளவங்களாப் பார்த்துத் தலைமை வகிக்கப் போடுங்களேன்!...” என்று கொஞ்சம் கெளரவத் தயக்கம் தயங்கினார் கமலக்கண்ணன்.

“தலைமைங்கறதே உங்களைப்போலத் தகுதி உள்ளவா யாராவது நாலுபேருக்கு முன்னாலே குழந்தையை ஆசீர்வாதம் பண்றதுதானே?” என்றார் வந்த உத்தியோகப் பிரமுகர். கமலக்கண்ணன் இதற்குமேலும் பிடிவாதமாக மறுக்கவில்லை.

“உங்க இஸ்டம் அப்பிடியானா நான் மறுக்கறதுக்கில்லே!” என்று இணங்கினார்.

“அப்போ இன்விடேஷன், வால்போஸ்டர்லாம் கொடுத்துடறேன் பத்திரிகைகளுக்கும் கொடுத்து ‘எங்கேஜ் மெண்ட்ஸ்’ காலத்தில் வரச்செய்து விடுகிறேன். ஏதோ இந்தக் கலையிலே உங்க ஆசீர்வாதத்தாலே தான் குழந்தை முன்னுக்கு வரணும்”– என்றார் வந்தவர். அவர் பேசியது வசீகரிக்கிற தினுசில் இருந்தது. ‘வால்போஸ்டர் கூட அடித்து உங்கள் பெயரை விளம்பரப்படுத்தத் துணிந்து விட்டேன். என்னைப் பதிலுக்குப் பெருமைப்படுத்துங்கள்’. என்று கெஞ்சுகின்ற தொனி தெரிந்தது. கமலக்கண்ணன் பதில் ஒன்றும் கூறாமல் புன்முறுவல் பூத்தார். வந்தவர் திரும்பிச் சென்றபின் அவர் தனக்குத்தானே சிந்திக்கத் தொடங்கினார். ‘ஏதோ ஒரு கூட்டத்துக்குத் தலைமை