பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவளைமலர்க் கருவிழியை ஒரம் போக்கிக் குனிந்துநிலம் கால்விரலால் கிளறி நின்றாள் தவளமலர் நகைமறைத்த இதழ்கள் மீது தனித்துடிப்பை முறுவலொடு தவழ விட்டாள். பூப்பொறித்த மேலாடை திருத்தி விட்டாள்; புறமுதுகில் தொங்குகிற சடையை மார்பின் மேற்புறத்துப் படரவிட்டாள்; பார்த்த பின்னர் மேலுமதைப் பின்புறத்தே புரள விட்டாள்; யாப்புறுத்த என்மனத்தைத் துடிக்க வைத்தாள்; எழிலெல்லாந் தன்னிடத்தே படைத்து வைத்துக் காப்பளிப்பாள் செய்கின்ற செய்கை எல்லாம் காதலுக்கோர் அறிவிப்பாம் என்று கண்டேன். செம்புலத்துப் பெயல்நீர்போல் இருவர் நெஞ்சும் சேர்ந்தமையால் இல்லறத்துப் பள்ளி புக்கோம்; ஐம்புலத்தை ஒருபுலமே யாக்கி யங்கே அளப்பரிய கலைபலவுங் கற்று வந்தோம்; அம்புவிக்கு விளக்காக விளங்குந் திங்கள், அளவில்பல விண்மீன்கள், அகன்றவானம்; எம்முளத்தில் புதியகதை பலவுஞ் சொல்ல இணைகூற முடியாத உலகஞ் சென்றோம். கவியரசர் முடியரசன் - 67