பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

நெருப்புத் தடயங்கள்

யாரும் எதிர்பாராத விதமாக, காலைக் கட்டிக்கொண்டிருந்த பைத்தியாரத் தர்மரு எழுந்தார். துணி பரப்பிய கயிற்றைப் பிடித்து இழுத்து, கயிறோடு வந்து செறுக்கி மவனை தூணுல கட்டி வையுங்கடா” என்று சொன்னபடியே, மண்டையனின் கைகளைப் பிடித்து, அவன் முதுகுக்குப் பின்னால் கொண்டு போகப் போனார். அவர் கோபம், கில்லாடியாரையும் தொற்றிக் கொண்டது. மண்டையனின் முதுகில் அடிக்க இடமில்லாமல் மாடக் கண்ணு நின்றதால், கில்லாடி முன்னால் வந்து, மண்டையனின் முடியைப் பிடித்து இழுத்தபடி “செறுக்கிமவனே... யாரப் பேசுனாலும் தமிழரசியையால பேசுறது? மெட்ராஸ்ல... காலேஜ்ல வாத்தியாராய் இருந்ததோட, பல பெரிய பெரிய கூட்டத்துல பேசி, பெயர் வாங்கமுடியாத இந்த குட்டாம்பட்டிக்கே பேர் வாங்கித்தார தமிழரசியைப் பத்தியா இப்படிப் பேசுனே? இதைவிட நீ என்மவள பேசியிருக்கலாம்... ஒன்ன .. ஒன்ன...” என்று சொல்லி அவன் முடியை முன்னும் பின்னுமாய் இழுத்தார்.

தமிழரசி, அடிபடுபவனையே பார்த்தாள். ஒரு கணம் அது சரியென்றுபட்டது. பிறகு காலஞ்சென்ற சோவியத் அதிபர் பிரஸ்நேவ் எழுதிய “கன்னி நிலம்” என்ற புத்தகம் அவளுக்கு நினைவுக்கு வந்தது. சோவியத் கலாச்சாரக் கழகத்தில், இந்த புத்தகத்தை விமர்சித்து, அவள் பேசியிருக்கிறாள். அதில் தோழர் பிரஸ்நேவ் இரண்டாவது உலகப்போரில் கருங்கடல் தீபகற்பம் ஒன்றில், உயிருக்குப் பயப்படும் வீரர்களை வீட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார். அவர்களிடம் இதுபற்றி பலர் முன்னிலையில் கேட்காமல், தனித்தனியாக கேட்க விரும்பினார். அதற்குக் காரணமும் சொல்கிறார். எவரையும்—அவர்கள் எவ்வளவு கோழைகளாக இருந்தாலும், கடமையாற்ற பயந்தவர்களாய் இருந்தாலும், அவர்களை பகிரங்கமாக இழிவு செய்ய, யாருக்கும் உரிமை இல்லை” என்கிறார். இது தான் மனிதாபிமானம். இந்த மானுடத்-