பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

17

தான் இந்த நூலின் ஜீவன்! என்று பேசி கைதட்டு வாங்கியிருக்கிறாள்! இப்போது, அவளே இந்த இழிவை அனு மதிக்கலாமா? ஒரு மனிதனின் இழிவு, மானுடத்தின் இழிவாகலாமா?

எப்போதோ படிக்கும் இலக்கிய வரிகள், சமயத்தில் வந்து கை கொடுக்கும் என்பதைக் காட்டுபவள் போல், மண்டையனைப் பிடித்து, தன் பக்கமாக இழுத்துக் கொண்டு, “என்ன மண்டையா, ‘என்ன தமிழு ... எப்போ வந்தே’ன்னு அன்போட கேட்கிற நீயா இப்டிப் பேசினே?” என்றாள்.

மண்டையன் குய்யோ, முறையோ என்று கத்தினான்.

“அய்யோ ... அய்யய்யோ ... ஒன்னப்பத்தி பேசினால் என் நாக்கு அழுகிவிடாதா? நான் பேசுனது வாஸ்தவந்தான். ஆனால் ஒன்னையில்ல; இந்த பொன்மணியோட பெரியய்யா மகள் தமிழரசி இருக்காளே, அவளச் சொன்னேன். வினைதீர்த்தான் சொல்லிக் காட்டுனது மாதிரியே தான் சொன்னேன். ஒன்னைச் சொல்லியிருந்தால் என் நாக்கு, வாய்க்குள்ளேயே பாம்பாவி, என்னைக் கொத்தி குடஞ்சிருக்காதா?”

வினைதீர்த்தான், கோபப் பார்வையை, சிநேகிதமாக்கினான். ‘பைத்தியாரத் தர்மரு’ மாடக்கண்ணு, மீண்டும் கல்தூணில் சாய்ந்தார். அருணாசலம், தார் பாய்ந்த வேட்டியை இழுத்து விட்டார். கில்லாடியார், தாம்பாளத்தில் இருந்து வெற்றிலைப் பாக்கை எடுத்தார். திடீரென்று பொன்மணி கத்தினாள்:

“ஏய் மண்டையா, எங்க பெரியப்பா மகளையா அப்டிக் கேட்டே? இரு, இரு, எங்க இன்ஸ்பெக்டர் அண்ணன் கிட்ட சொல்லி ஒன்னை போலீஸ்ல புடம் போடச் சொல்றேன்.”

நெ—2