பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

19

அவளைப் பார்த்ததுபோல் தோன்றியது. பதவிக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல், பெளவியமாகப் போய்க்கொண்டிருந்தான். தோளில் ஒரு கலர் துண்டையும், கையில் சோப்பு டப்பாவையும் பார்த்ததாக ஞாபகம். குளிக்கப் போகிறார் போலும் காசியாபிள்ளை கிணற்றைப் பார்த்துத்தான் போவார்!

தமிழரசிக்கு, உடம்பெல்லாம் கசகசவென்று இருப்பது போல் தோன்றியது. ரயிலில் கூட்டத்தில் இடிபட்டு, கசங்கி, உடம்பெல்லாம் எரிச்சலாய் இருக்கு. குளிக்காமல் இருக்க முடியாது இருக்கவே முடியாது... அப்பப்பா ... உடம்பெல்லாம் புழுக்கம்.

பகவதியம்மாள், வாழை இலையை விரித்தபோது, தமிழரசி “எம்மா, என்னால குளிக்காமல் சாப்பிட முடியாது. குளிச்சே ஆகணும்” என்றாள்.

“கலாவதி, ஒக்காவுக்கு வெந்நிய பழையபடி சுட வை. என்ன பொண்ணோ நீ.”

“எனக்கு வெந்நீர் வேண்டாம்மா. காசியா பிள்ளைக் கிணத்துல பம்ப்செட் ஓடுதுல்லா... அங்கே போய் தலையைக் கொடுத்தால்தான் குளிச்சது மாதிரி இருக்கும்.”

“நாளைக்குப் போகலாம். இப்போ வேணுமுன்னல் லேசா குளிச்சிட்டு சாப்புடு, இங்கேயே குளி...”

தமிழரசி, பதில் பேசவில்லை. வீட்டுக்குள் போய் சூட்கேசைத் திறந்து, டர்க்கி டவலையும், சோப்பு டப்பாவையும் எடுத்தாள். பிறகு, பெட்டியைப் பூட்டினாள். வெளியறைக்கு வந்தவளுக்கு, புடவையை எடுக்காதது நினைவுக்கு வந்தது. சூட்கேசைத் திறக்கப் போனாள். அதற்குள் நேரமாகி... அவர் போய்விட்டால்...

கொடியில் கிடந்த அம்மாவின் புடவையை எடுத்துத் தோளில் போட்டபடியே, கலாவதியையும், பொன்-