பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

25

படியாச்சு’ என்று ‘அவர்’ சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. அந்த இன்னொருத்தியுடன் அவன் அப்படியும் நடந்திருக்கலாமோ என்ற ஒரு பயக் கற்பனை. தெய்வயானையை தேர்ந்தெடுத்த அவனுக்கு, தான் வள்ளியாக இருக்கலாமா என்பது போன்ற இடக்கு மடக்கான சிந்தன.

சிறிது நேரத்தில், தமிழரசி, தன்னைத்தானே நிமிர்த்திய வேகத்தில், உள்ள மும் கூன் போடாமல் நின்றது. அவர் காதலிக்காதபோது, நான் ஏன் காதலிக்கணும்? இப்போ...இதோ...நெளிகிற உணர்வு, சுய மரியாதையைக் கவ்வும் ஒரு நச்சுப் பாம்பு. அதை அடித்துக் கொல்ல முடியாவிட்டாலும் பிடித்துக் கொள்ள வேண்டும்! நீராக நெளிந்த அவள் மனம் ஒன்று திரண்டு ஐஸ் கட்டியாகியது. ஐஸ் கட்டியை, கல்லென்று நம்பி, கல்லாக நின்றாள்.

தமிழரசியை ரசித்துப் பார்த்தோ அல்லது பார்த்து ரசித்தோ, தனக்குள் தானே மூழ்கியிருந்த தாமோதரனுக்கு, அவள் பார்வையின் நோக்கோ, போக்கோ புரியவில்லை. அவளேயும் சுற்றுப்புறத்தையும், தன்னையும், கண்களால் சுத்திச் சுத்தி வட்டமடித்தபடி நின்றான்.

இதற்குள் தென்னைக்குப் பின்னால் சிரிப்பை விட்டு விட்டு, கலாவதி குறுஞ் சிரிப்போடு வந்தாள். எதுவுமே நடக்கவில்லை என்று அவளுக்கு உணர்த்துவதுபோல், அவள் தப்பாக நினைக்கக்கூடாது என்பதற்காக, அவன் தமிழரசியிடம் ‘தப்பாகப்’ பேசினான்.

“தமிழ்ல காலேஜ்தான எடுத்திங்க. ஸாரி...பி.ஏ.வுல எக்னமிக்ஸ் எடுத்திங்க...பிறகு ஏன் எம். ஏ.வுல தமிழ் எடுத்தீங்க? கஷ்டமாய் இருந்திருக்குமே?”

மிகப் பெரிய கேள்வி கேட்டவன்போல், அவன் தன் கையை இடுப்பில் வைத்தபோது, தமிழரசி, இடுப்பில் வைத்த கையை எடுத்து வீசியபடியே பதிலளித்தாள்: