பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நெருப்புத் தடயங்கள்

ஒருவர் கண்முட்டப் பார்த்து, வாய் முட்டப் பேசிக்கொண்டிருந்தார்கள். கடத்திப்போன கடந்த பத்தாண்டு காலத்தையும், அந்த நிகழ்காலத்திலேயே நிகழ்த்திக் காட்டப் போகிறவர்கள்போல், ஒருவர் கண்களில் பிறிதொருவர் மட்டுமே நிறைந்திருந்ததால், இடைச்செருகலாக வந்த பொன்மணியை, அவர்கள் கவனிக்கவில்லை. மூச்சு முட்ட ஓடிவந்து நின்ற அவளோ, அங்கேயே, அந்தக் கணத்திலேயே, தனது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முடிவை ஏற்படுத்திவிடத் துடித்து நின்றாள்.

பொன்மணி, தாமோதரனின் கடைசித் தங்கை. அவன் வீட்டில், அவள்தான் கடைக்குட்டி’. கறுப்புக்கும், சிவப்புக்கும் இடைப்பட்ட மாநிறம். அதே சமயம் மங்காத நிறம். குற்றால நீரை உள்வாங்கி உள்வாங்கி, நீர் பொங்க பளபளத்து நிற்கும் பாறைபோன்ற உறுதியான முகம். வேல்போல் குவிந்த புருவ மத்தி. வெண் பொங்கலும், அரை குறையாய் அதில் கரைந்த கருப்பட்டியும், பானையில் இருந்து பொங்குவது போன்ற கண்கள். ஈரப்பசையான உதடுகள். ஏதோ ஒட்டப் பந்தயத்தில், ஒடுவதற்குத் தயாராக இருப்பவள் போல் உள்நோக்கி லேசாய் குவிந்த உடம்பு. பத்தொன்பது வயதுக்கேற்ற பார்வை வீச்சு,

'பிளஸ்டு'வில் மைனஸ்ஸாகப் போனதால், தானாகவே படிப்பை முடித்துக் கொண்டவள். எவர் சொன்னாலும், முடிவை மாற்றிக் கொள்ளாதவள் என்பதை அறிந்திருந்த குடும்பத்தினர், அவளை 'பள்ளிக்குப்போ’ என்றும் சொல்ல வில்லை. 'வயலுக்கு வா’ என்றும் கேட்கவில்லை.

தாமோதரனும், தமிழரசியும் பேச்சுவாக்கில், எதேச்சையாகத் திரும்புவது வரைக்கும் காத்திருக்க விரும்பாத பொன்மணி, அவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் இருமினாள். அதனல் திருப்பப்பட்ட தாமோதரன், தங்கை மிகப் பெரிய தப்பைச் செய்துவிட்டவள்