பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

37

சொல்லச் சொல்லலாம். ஒன்னும் முடியாமல் போனால் இருக்கவே இருக்காரு அவரு ... அவர் இல்லன்னா விஷம். நான் காதலுக்குப் பயப்படுறதுனால, உயிருக்குப் பயபபடாதவள்.

பொன்மணியின் கலக்கம் புரியாத கலாவதி, தனக் குள்ளேயே அப்போதுதான் ஒரு தாற்காலிகக் கற்பனையை சிருஷ்டித்துக் கொண்டிருந்தாள். எனக்கு எப்போ... யாரு...எங்கே... நமக்குன்னு ஒருவன் இனிமேல் பிறக்கவா போருன்? வரப்போறவன் அப்பாமாதிரி பைத்தியாரத் தர்மராயும் இருக்கப்படாது. வினைதீர்த்தான் அண்ணாச்சிய மாதிரி முரட்டு வீமனாயும் இருக்கப்படாது. அருச்சுனன் மாதிரி... சீ... அவன் மாதிரியும் கூடாது. ஆற்று மணல எண்ணினாலும் எண்ணிடலாமாம். அருச்சுனன் பொண்டாட்டியள எண்ண முடியாதாம். இப்பவே ஏன் நினைக்கணும்? எவனே ஒருவன் வரும்போது பார்த்துக்கிட்டா போச்சு. நல்ல மாப்பிள்ள கிடைக்க நமக்கு என்ன நகைநட்டு இருக்கா? சொத்து சுகம் உண்டா...?

கற்பனையை, நடைமுறை வாழ்க்கை நினைப்பு குலைக்க, கலாவதி எழுந்தாள். பிற பெண்களைப்போல், பொன் மணியைப் பொருமையாய் பார்க்காமல், சினிமா கதாநாயகியிடம் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ளும் ரசிகை போல, அவள், தன்னை பொன்மணியுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டாள். மெள்ள நடந்தாள். தான் நடப்பது பொன்மணிக்குத் தெரியாமல் இருப்பதற்காக, கைகளைப் பரவலாகத் தூக்கி, குதிகாலில் நடந்து, பொன்மணியைப் பின்புறமாகப் போய் பிடித்தாள். பிடிபட்டுத் திமிறியவளை அலாக்காகத் தூக்கிக் கொண்டுவந்து தமிழரசியின் அருகே போட்டுவிட்டு, "பரவாயில்லியே! அக்காளுக்கும், தங்கைக்கும் ஒரே நாள்ல கல்யாணமா? ஒரு பந்தயம். இரண்டு பேர்ல, யாரு மொதல்ல பிள்ள பெறப்போறாங்கன்னு பார்ப்போம்” என்று சொல்லிச் சிரித்தாள்.