பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

நெருப்புத் தடயங்கள்

உடனே தாமோதரன் “அது... ஒங்க அண்ணன் ராஜ துரையோட சாமர்த்தியத்தையும், நாகர்கோவில்காரர் திறமையையும் பொறுத்திருக்கு...” என்று சொல்லிவிட்டு, பிறகு, தங்கையின் முன்னால் பேசத் தகாத.இதுவரை பேசி யறியாத வார்த்தையைப் பேசிவிட்ட குற்றவுணர்வில், தமிழரசியையும், கலாவதியையும் மாறி மாறிப் பார்த்தான். அவர்களோ, சொல்லிவைத்தாற்போல், கண்களை கைகளால் மூடிக்கொண்டார்கள்.

... இந்தச் சாக்கில், பொன்மணி, தானும் நாணப்படுவது போல், முகந்திருப்பி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். தமிழரசி, எப்போது தனியாக விடுபடுவாள் என்று அவள் வினாடிகளை நிமிடங்களாக, நிமிடங்களை மணிகளாகப் பாவித்துக் கொண்டிருந்தாள். பிறகு இருக்க முடியாமல் எழுந்தாள். நடக்க முடியாமல் மீண்டும் உட்கார்ந்தாள். கைகளை நொடித்தாள். கால்களை தரையில் தேய்த்தாள்.

இதற்குள், வேறொரு கிணற்றுப் பக்கத்திலிருந்து, அவர்களிடம் வந்துசேர்ந்த வினைதீர்த்தான், அவர்களைக் *கண்டுக்காமலே' தென்னை மரங்களை அண்ணாந்து பார்த்த படியே நின்றான். தாமோதரன், அவனையே விழுங்கப் போவதுபோல் நோக்கினான். வேலூரில் போலீஸ் பயிற்சி பெற்ற தன்னைவிட, அவன் உடம்பு கனகச்சிதமாய் இருப்பதை ரசித்துப் பார்த்தான். குத்திட்ட மீசை. குதிக்கும் கண்கள், விரிந்த தோள். தூக்கலான பார்வை. ‘ப’ வடிவத்தில் அமைந்த வயிற்றை, ஆங்கில 'ஒய்' எழுத்தின் வடிவத்தில் சுமக்கும் இடுப்பு. இவன், சாட்டைக்கம்பு வைத்திருக்கும் வேலையில் இருக்கக் கூடாது. கையில் லத்திக்கம்பு இருக்கவேண்டும்.

சிறிதுநேர பார்வைக்குப் பிறகு, தாமோதரன், தமிழரசியைப் பார்த்து "ஒங்க வினைதீர்த்தானை... போலீஸ் கான்ஸ்டபிள் வேலையில் சேர்த்துடலாமுன்னு நினைக்கேன்.