பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

நெருப்புத் தடயங்கள்

இருந்தால் கூட, வாழ்ந்தால் ஒங்களோடதான் வாழணுமுன்னு நினைக்க வச்சு, என்னை அடிமையாய் மாற்றிட்டீங்களே... பெரிய ஆளுய்யா நீங்க...”

‘அடிமை கிடிமைன்னு ஏன் அபத்தமாய் பேசுறே?’’

"காதலே ஒரு அபத்தந்தானே. இல்லன்ன பத்து வருஷம் பாராமுகமாய் இருந்த என்னால, இப்போ பத்து நிமிஷங்கூட பிரிய மனம் வரலியே...”

இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு, ஒருவரை ஒருவர் மவுனமான அழுத்தத்துடன், பாசம் பரிணாமப்பட்டது போல் பார்த்துக் கொண்டார்கள். தாமோதரன், அவள் கையைப் பிடித்து வளையல்களை உருட்டினான். எவராவது பார்க்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காக அக்கம் பக்கம் கண்போட்ட தமிழரசி, தாமோதரனைத் தள்ளி விட்டு விட்டு, ஸ்டெடியாக உட்கார்ந்தாள்.

அப்போது தாமோதரனின் அண்ணன் முத்துலிங்கம், வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார். அவர்களது தனித்த நிலையைப் பொருட்படுத்தாமல் தாவி வந்தார்; கோர்வை இல்லாமல் கத்தினார்.

"நம்ம பொன்மணியை வேலக்காரப் பயல் வினை தீர்த்தான் கூட்டிக்கிட்டு ஓடிட்டான். தென்காசியில அவங்களப் பார்த்ததா மண்டையன் சொல்லிட்டுப் போறான். நான் நாலாகரையும் கத்தி கம்போட ஆட்களை அனுப்பியிருக்கேன். அடுத்துக் கெடுத்த அந்த செறுக்கி மவன, இன்னைக்கு ராத்திரிக்குள்ள கொன்னு... குழி தோண்டிப் புதைக்காட்டால் நீ இன்ஸ்பெக்டரும் இல்ல; நான் இன்ஸ்பெக்டர் அண்ணனும் இல்ல. உ.ம்... புறப்படுடா, துப்பாக்கி வச்சிருக்கியா?’’

தமிழரசி திடுக்கிட்டாள். முத்துலிங்கத்தை உற்றுப் பார்த்தாள். கண்களில் கொலை வெறி; பற்களில் நரமாமிச வேகம்; போக வேண்டாம் என்று சொல்லாமல் சொல்வது