பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

63

கிறது. காலத்தோட கோளாறோ? இல்ல காதலோட கோளாறோ?

தமிழரசியும், தன் பங்குக்கு வினைதீர்த்தானை திட்ட வேண்டும் என்று ராஜதுரை எதிர்பார்த்தான். அவள் திட்டாத தில் அவனுக்கு ஏமாற்றம். அவளை முறைத்த படியே பார்த்தான்.

சிறிது நேரத்தில் சித்தப்பா மாடக்கண்ணுவும், அவர் மகள் கலாவதியும் வீட்டுக்குள் வந்தார்கள். ராஜதுரை அவர்களைப் பார்க்காததுபோல் பாவித்தான். மாடக்கண்ணு, மார்போடு சேர்த்துத் தூக்கிய உள்ளங்கையில், தலையைக் கவிழ்த்தபடி நின்றார். கலாவதி சிதறிய முடியோடு, சிந்திக்கும் திராணியற்று, ஆறுதல் தேடுபவள் போல் தமிழரசியைப் பார்த்தாள். சிறிது நேரம் தயங்கி நின்ற மாடக்கண்ணு, பிறகு படபடப்பாகப் பேசினார்.

“பன்னாடப்பய. இப்டிப் பண்ணுவான்னு நான் நினைக்கல. நமக்கும் கல்யான வயசுல ஒரு தங்கச்சி இருக்காள்னு நினைக்காமல், குடியைக் கெடுத்திட்டான். தங்கச்சியாய் நினைக்க வேண்டியவள, தாரமாய் நெனச்சுட்டான். எனக்குக் கையும் ஒடல, காலும் ஒடல!’’

சித்தப்பா பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்த தமிழரசிக்கு, அவர் முகத்தில் அப்பிய துயரம் தொத்தியது. இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசாத சித்தப்பா பேசவில்லை. வேதனைகளை வெளிக்கொண்டு போடுகிறார்! பாவிப் பயல்! இந்தத் தள்ளாத மனிதரை விட்டுட்டுப் போக எப்படி அவனுக்கு மனம் வந்தது?

தமிழரசி, சித்தப்பாவின் துயரத்தைப் பங்கிட்டுக் கொள்பவள்போல், அவரை நோக்கி “உட்காருங்க சித்தப்பா" என்றாள். அவரும் நாற்காலியில் உட்காராமல் தரையில் உட்கார்ந்தார்.