பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

நெருப்புத் தடயங்கள்

என்று சொல்லாமல், 'வரமாட்டாள்” என்று திட்டவட்டமாகச் சொன்னது, தமிழரசியின் நெஞ்சைத் தட்டியது. உடனே கலாவதியின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, சந்தேகப் பார்வையை உணர்த்தியபோது--

தன்னைத்தானே உறிஞ்சிக் கொள்பவள்போல், கண்ணென்ற மலையில் இருந்து விழுந்த அருவியை, வாயென்ற குளத்திற்குள் விட்டு உதடுகளால் உறிஞ்சுபவளாய், குனிந்த தலை நிமிராமல் நெடிதாய் நின்ற கலாவதி எவரும் எதிர்பாராத வகையில்-அவளே எதிர் பாராத வகையில், தடாரென்று தரையில் குப்புற விழுந்து, தமிழரசியின் கால்களைப் பிடித்தபடியே, விம்மியழுது வெடித்தாள்.

"நாங்க ஒரு பாவமும் அறியாதவங்க தமிழு. சத்தியமாய் என்ன நம்புக்கா. காலையில எங்கண்ணன் விருந்துக்குப் போறது மாதிரி சட்டை போட்டிருந்தான். அதனால அவன்கிட்ட என்ன விஷயமுன்னுதான் கேட்டேன். அதுவும் இந்த வீட்ல வச்சுத்தான் கேட்டேன். ஜன்னலுக்கு அந்தப் பக்கம் பொன்மணி நின்னது சத்தியமாய் எனக்குத் தெரியாது. எங்கண்ணன் இன்னிக்கு வேற வழியில்லாம சினிமாவுக்குப் போறேன். அப்பாவை பத்திரமாய் பார்த்துக்கன்னு” சொன்னதை, லேசா எப்போவாவது குடிச்சுட்டு உளறுறது மாதிரி அப்பவும் உளறுருன்னு நெனச்சேன். உடனே 'என்னையும் சினிமா வுக்குக் கூட்டிட்டுப் போயே’ன்னு கேட்டேன். அப்போ பெரியம்மா வந்தாள். ‘என்னளா பொம்புள இப்படி அடக்கம் இல்லாமல் சினிமா கினிமான்னு பேசுறியேன்"னு திட்டுவாள்னு, சொன்ன சொல்ல பாதில விட்டேன். சத்தியமாய் நடந்தது இதுதான். அந்தப் பாழாப் போற பாவி, இப்படிப் பண்ணுவான்னு எனக்குத் தெரியாது, தெரியவே தெரியாது.”