பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

71

தமிழரசி, கலாவதியை தூக்கி நிறுத்தினாள். ஆனல் அவளால் எதுவும் பேச முடியவில்லை. கலாவதியிடம் பேசப் போனால், தனக்கும் அழுகை வந்து விடும் போலிருந்தது. ஆயிரம் நடந்ததோ, நடக்கலியோ ஒரு வயதுக்கு வந்த பெண், பழிதுடைக்க முடியாமல், கண்களைத் துடைக்கும்போது, மனிதாபிமானம் கலங்காமல் இருக்காது. தமிழரசி கலங்கினாள். உடனே பகவதியம்மாள் இடைச்செருகலானாள்:

‘"ந்த மூளியலங்காரி மூதேவி சண்டாளி, வென தீர்த்தானையும் பொன்மணியையும் உள்ள வச்சுட்டு, வெளில எத்தனையோ நாளு காவல் காத்திருக்காள். அதை ஏன் கேட்க மாட்டக்கே?’’

தமிழரசி, கலாவதி சார்பில், அன்னையிடம் கண்களால் மோதி, தன் சார்பில் குறுக்கு விசாரணை செய்தாள்.

“அப்படின்ன நீயே... அப்பவே அவங்களையும், இவளையும் கண்டிச்சிருக்கலாம். நீ ஏன் கண்டிக்கல? நீயும் வேடிக்கை பார்க்க நினைச்சியா?”

பகவதியம்மாளுக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாததால், ஏதாவது பேசண்டா...’ என்பது போல் மகனைப் பார்த்து விட்டு, அவனும் பேசாமல் இருந்ததால், தமிழரசியிடம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தாள். அதாவது முறைத்தாள்.

கலாவதி, மீண்டும் மன்றாடினாள். “சத்தியமாய் இவங்க ரெண்டுபேரோட இழவுச் சமாச்சாரம் எனக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால வரைக்கும் தெரியாது. பொன்மணி அண்ணன்கிட்ட வந்து, அவங்க வீட்டு விவகாரத்தை சளசளன்னு சொல்லிக்கிட்டு வருவாள். அவளோட அண்ணி- அதுதான் முத்துலிங்க மச்சானோட பெண்டாட்டி இவளை எப்படில்லாம் திட்டுறாள்னு சொல்லி, அவன்கிட்ட அழுவாள். அவனும்