பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

77

ஒன்று, ஆவேசமாய் கேட்டது. கோழிகள் அங்குமிங்குமாய் பறந்து, வீட்டுக் கூரைகளில் தாவி, பனையோலைகளை சலசலப்புச் செய்த சத்தம் கேட்டது. கூட்டமாக நிற்பது போல் தோன்றிய ஊராரின் கிசு கிசு சத்தம். ஆட்கள், அங்கிருந்தோ அல்லது அங்கேயோ ஒடும் காலடிச் சத்தம். கலாவதியின் செல்லப் பசுமாடு “ம்மா...’ என்று கனைக்கும் சத்தம்-ஆகிய அத்தனை சப்தங்களும், தமிழரசியின் சப்த நாடிகளில் பாய்ந்து, அவளை நிமிர வைத்தன. எல்லா சப்தங்களையும் நிசப்தமாக்குவது போல் “வேண்டாய்யா ... வேண்டாய்யா... இதுக்குமேல எனக்குத் தாங்க முடியாதுய்யா...’ என்று கெஞ்சும் குரலோடு, முத்துமாரிப் பாட்டி ஒப்பாரி போட்டது கேட்டது. கலாவதியின் முனங்கலும், மாடக்கண்ணுவின் ஊமைக்குரலும் கலந்து கேட்டன.

தமிழரசியின் கால்கள் சக்கரங்களாயின. முகத்தைக் கழுவாமல் முந்தானையால் துடைத்தபடியே, தளத்திற்கு வந்தவள், வராண்டாவில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவள் தந்தை அருணாசலம், அன்றைய தினசரிப் பத்திரிகைக்குள் முகத்தை மறைத்து, பூலோகத்தின் அந்தப் பகுதியில் எதுவும் நடக்கவில்லை என்பதுபோல் கண்களை மூடிக்கொண்டார். மாட்டுத் தொழுவத்தில், ஒரு காளை மாட்டின் கொம்பை தடவி விட்டுக் கொண்டிருந்த ராஜதுரை, அவளைப் பார்த்ததும், வேறுபுறமாகத் திரும்பிக் கொண்டான். அம்மாக்காரி பகவதியம்மா, இப்போதும் எதுவும் நடக்காததுபோல், “காபியை சூடாக் கட்டுமா’ என்று மகளிடம் “கூலாகக்' கேட்டாள்.

தமிழரசி படபடப்பாய், பரபரப்பாய், விறுவிறுப்பாய், வெளியே ஒடினாள். பத்திரிகையில் இருந்து முகந்திருப்பிய, அருணாசலம், 'எங்கே போறே' என்று கேட்பதற்கு வாயெடுத்து வாய் மூடுவதற்கு முன்பாக, ராஜதுரை மாட்டின் இன்னொரு கொம்பை தடவுவதற்காக