பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

நெருப்புத் தடயங்கள்

கையெடுத்து கை வைக்கும் முன்பாக, அவள் மறைந்து விட்டாள்.

வீதிக்கு வந்து, சப்தங்கள் சபதமிட்ட சித்தப்பா வீட்டிற்குள் போகப் போனவள், தெருவில் போலீஸ் ஜீப்பைப் பார்த்தாள். முத்துலிங்கம் மச்சானின் மோட்டார் பைக்கையும் கண்டாள். அவர் போலீசிற்கு வேண்டப் பட்டவர் என்பதைக் காட்டும் வகையில், அவரது பைக் போலீஸ் ஜீப்பை உரசிக் கொண்டிருந்தது.

வீடு தாங்காமல் வெளியே குவிந்திருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அத்தனை பேரும் அவளுக்கு வழிவிட்டு, அவள் பின்னாலேயே உள்ளே போனார்கள். மூன்று மண்சுவர் படிக்கட்டுக்களில் இறங்கி, சித்தப்பா செங்கோலோச்சும் ஒலே வீட்டின் முற்றத்திற்கு வந்தாள். தலைகீழான ‘ட’ வடிவத்தில் கட்டப்பட்ட அந்த வீட்டின் முன் வியாபித்திருந்த அகண்ட வெளிக்குள், மூன்றில் ஒரு பகுதியில் தெளிக்கப்பட்ட சாணநீர் முடியாக் கோலம் போல், ஒரு பானையில் கிடந்தது. ஆங்காங்கே லத்திக் கம்புகள் குடைந்ததாலோ, குத்தியதாலோ, அந்தப் பகுதி தன்னுள் இருந்த செம்மண்ணை, சதைக்கட்டி போல் காட்டியது. முத்துமாரிப் பாட்டி, குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி, வீங்கிப் புடைத்த முட்டிகளை ஊதிவிட்ட படியே "அட கரிமுடிவானுவளா...எங்களுக்கும் ஒரு காலம் வராமலா போகும்" என்று தனக்கு மட்டுமே கேட்கும் குரலில், போலீஸ் நடவடிக்கைகளைப் பார்த்தபடியே விம்மிக் கொண்டிருந்தாள். கூட்டமோ, போலீசாரின் லத்திக் கம்புகளின் வீச்சிற்கும், வேகத்திற்கும் ஏற்ப, கூடிக் கொண்டும், குறைந்து கொண்டும் இருந்தது.

தமிழரசி ஆவேசியாகி, பார்த்த இடத்தில்--

சித்தப்பா மாடக்கண்ணுவின் நீண்ட தலைமுடியைப் பிடித்து, தன் கைக்குள் வைத்திருந்த ஒரு போலீஸ்காரர், தன் கையைச் சுண்டிச்சுண்டி இழுத்து விட்டபோது,