பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

79

இன்னொரு போலீஸ்காரர், லத்திக் கம்பால் அந்த பைத்தியாரத் தர்மரின் முதுகிலும், தலையிலும் மாறி மாறி குத்திக் கொண்டும், குடைந்து கொண்டும் இருந்தார். “ஒன் மகன ஒளிச்சு வச்சிருக்கிற இடத்த மட்டும் நீ சொல்லல, அப்புறம் நீ எந்த இடத்துலயும் இருக்க முடியாது. கிழட்டுப் பயலுக்கு இவ்வளவு அழுத்தமுன்னால், எங்களுக்கு எவ்வளவு இருக்கும்’ என்று .நான்காவது போலீஸ்காரர் அதட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு போலீஸ்காரரின் பிடியில் சிக்கியிருந்த கலாவதி, எப்படியோ அந்தப் பிடியில் இருந்து விடுபட்டு. தந்தையின் முதுகுமேல் தன் மேனியை சுமத்திக் கொண்டு, *"எங்காப்பாவ விட்டுடுங்கய்யா, விட்டுடுங்கய்யா’’ என்று புலம்பினாள். அவள் தன்னிடம் இருந்து திமிறி வெளியேறியதை, தன் உடல் பலத்திற்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்ட போலீஸ்காரர், பாய்ந்து வந்தார். அவள் கொண்டையைப் பிடித்திழுத்து, தன் புறங்கைகளால் அவளை மாறிமாறி கன்னத்திலும், காதோரத்திலும் அடித்தார். அந்த அடிகளைக் கண்டறியாதவள் போல், “என்னை வேணுமுன்னால் அடிங்கய்யா. எங்கப்பாவ விட்டுடுங்கய்யா. ஒங்களுக்கு கோடிப் புண்ணியம் உண்டுய்யா..." என்று ஈனக்குரலோடும், ஏக்கப் பார்வை யோடும் முனங்கிய கலாவதி, தந்தையின் கருப்புக் கருப்பாய், பாளம் பாளமாய் காய்ப்புப் பிடித்த முதுகில், சிவப்புச் சிவப்பாய் ரத்தம் பீறிடுவதைக் கண்டு "அட பாவிப் பயலே! அடுத்துக் கெடுத்த துரோகி... ஒன்னல நாங்க படுற பாட்டைப் பார்த்தியாடா... நீ எங்கடா போனே? எங்கடா போனே?’ என்று அண்ணன் வினைதீர்த தானுக்கு, 'புலம்பல் தூது’ விட்டுக் கொண்டிருந்தாள். உடனே இன்னொரு போலீஸ்காரர் தேவடியா மவள் பேசுறதப் பாரு. ஏடி நடிச்சி மழுப்பிடலாமுன்னு நெனைக்காதே. உண்மையச் சொல்லாட்டால் சுட்டுப் பொசுக்கிடுவோம்" என்று சொல்லிச் சவாலிட்டார்.