பக்கம்:நேசம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154லா. ச. ராமாமிர்தம்


மேஜை சாப்பாடு. மானேஜருக்கு உள்ளங்கையளவுக்கு இரண்டு சிறிய சப்பாத்திகள். ஏதோ கூட்டு. எங்களுக்கு வற்றல் குழம்பு, பருப்புத் துவையல். சுடவைத்த மத்தியான்ன ரஸ்வண்டல். "அம்பி, என் சாப்பாட்டைப் பார்த்து, நீ வெட்கப் படாதே. அதற்கேற்றபடி உன் வயிற்றை நீ குறுக்கிக்கப் பார்க்காதே. வயசுப் பையன் நீ நல்லா சாப்பிடணும். இது என் தலையெழுத்து. சாப்பாட்டு ராமனாயிருந்துதான், பட்டினிச் சாவில் வந்து முடிஞ்சிருக்கு. எனக்கு இனி விமோசனமில்லை." பாலா எதிரில் அமர்ந்திருக்கிறாள், மோன பீடத்தில் முகத்தில் லேசான புன்னகைகூட இல்லை. நான் இங்கிருந்த வரை அவள் பேசியதாகவே தெரியவில்லை. அல்லது அவள் குரலையேனும் எந்தவிதமாகவும் கேட்டதாகவும் தெரிய வில்லை. அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. புது இடமோ, இவ்வளவு திடீர் சுகங்களுக்குப் பழக்கம் உடையேன் அல்லன் என்றோ, இன்னும் வார்த்தைகள் அவை பயக்கும் ரேகைகள் இமையுள் தம்மை எழுதிக்கொண்டு மறைந்துகொண்டு, மறுபடியும் வரைந்து கொண்டு... யூனிபாரம். உருப்படியா, உறுதியா, நிச்சயமா, பாங்க் செலவில் இரண்டு ஸெ ட் வெள்ளை உடைகள், வலிக்கிறதா? மாலையில் அதைக் களைந்ததும், மறுபடியும் அம்பி. (எப்பவுமே அம்பிதான்!) மானேஜர் என்னிடம் காட்டும் தனி உறவின் விளைவாக! என்னைக் காப்பி வாங்கி வா, பொட்டலம் வாங்கிவா -இதுபோன்ற காரியங்களை வாங்குவதற்குச் சிவராமன், விசு, காஷியருக்குத் துணிச்சல் இல்லை. யாரும் மணி அடித்து அழைக்கவில்லை. பேரைச் சொல்லியே அழைத்தார்கள். கேட்கப்போனால், அதிகம் அழைப்பதுகூட இல்லை. மானேஜர்கூட. மணி தட்டுவ தில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/160&oldid=1403612" இலிருந்து மீள்விக்கப்பட்டது