பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

துலக இந்தியக் கடல் ஆராய்ச்சியும் எதிர்காலத்தில் மற்றக் கடல்களை ஆராய்வதற்கு வழிவகை செய்யும்.

குக்

நாடு கண்ட சிறந்த பெருமக்களில் ஒருவர் கேப்டன் குக் என்பார். அப்பொழுது பசிபிக்கின் பெரும் பகுதிகள் ஆராயப்படவில்லை. அப்பகுதிகளை ஆராய ஆங்கில நாட்டு அரசாங்கம் குக்கை 1768-இல் தேர்ந்தெடுத்தது.

1768-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிளைமவுத்திலிருந்து ’எண்டவர்’ என்னுங் கப்பலில் குக் புறப்பட்டார். இக்கப்பலின் எடை 370 டன். தாகிதிப் பகுதியில் வானியல் உற்று நோக்கல்கள் செய்வதும்; தென் பசிபிக்கை ஆராய்வதும் அவரது பணியாகும்.

இடர்களுக்கிடையே பயணம் ஏழு மாதம் நடை பெற்றது. 1769-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குக் காகிதியை அடைந்தார். காகிதி என்பது அழகான தீவு; பசிபிக் பகுதியில் உள்ளது. இதன் தட்பவெப்ப நிலை மிக இனிமையானது. மிக்க மகிழ்ச்சியுடன் மாலுமிகள் இங்குத் தங்க விருப்பப்படுவார்கள்.

குக் தாம் மேற்கொண்ட பணியைத் தாகிதித் தீவில் முடித்தார். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளை நன்கு ஆராய்ந்தார். மூன்றாண்டு பயணத்திற்குப்பின் மீண்டும் தாய் நாட்டை அடைந்தார்.