பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


வயிற்றுக் கொடுமை கூலியைக்கூடக் குறைக்கச் சொல்லுது. ஆனா, உங்களுக்கு உதவி செய்றதுக்குக்கூட, எனக்கு விதியில்லை. தயவு செய்து வேற யாரையாவது போய்ப் பாருங்க."

நெசவாளிகள் அந்த இடத்தை விட்டு அடி பெயரவில்லை .

வடிவேலு முதலியார் கட்டி, வறண்டுபோன தொண்டையைலேசாகக்கனைத்துச்சரிபடுத்திக்கொண்டு, "அண்ணாச்சி, வெட்கத்தை விட்டுச் சொல்லுதேன், வீட்டிலே ஒரு மணி அரிசிகூட இல்லை. நேத்து ராத்திரியிலேயிருந்து ஒண்ணுமே சாப்பிடலை. வீட்டுக்காரிக்கு வேறே உடம்புக்குச் சரியில்லை_" என்று பரிதாபகரமாகச் சொல்லத் தொடங்கினார்.

கைலாச முதலியாரால் அந்தப் பிரலாபத்தைக் கேட்டுக் கொண்டிருக்க இயலவில்லை. எனவே அவர் விருட்டென்று இடத்தைவிட்டு எழுந்திருந்தவாறே, "தம்பி, உங்க கஷ்டம் எனக்குத் தெரியத்தான் செய்யிது. உங்களை மாதிரித் தறிகாரர் பாடும் திண்டாட்டம், என்னை மாதிரி, "தொட்டுக்கோ துடைச்சிக்கோ' என்றிருக்கும் சிறு வியாபாரிகள் பாடும் திண்டாட்டம். இப்போ உள்ள நிலைமையில் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உங்களை ரொம்பவும் வேண்டிக்கிடுதேன். தயவு பண்ணி வேறே யாரையாவது போய்ப் பாருங்க" என்று மளமள வென்று பதில் கூறிவிட்டு, அதற்குப் பதிலை எதிர்பாராதவராக, எதிர்பார்க்கும் விருப்பம் அற்றவராக, வீட்டுக்குள் சென்று மறைந்தார்.

"முதலாளி" என்று ஒரு நெசவாளி அவயக் குரல் எழுப்பிப் பரிதாபகரமாக உரத்துக் கூப்பிட்டார். ஆனால் கைலாச முதலியாரோ முகத்தைக் கூடத் திரும்பவில்லை .

நெசவாளிகள் அனைவரும் இன்னது செய்வதெனத் தெரியாமல், அந்த இடத்திலேயே முளையறைந்த மாதிரி