பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


கட்டுக்களை எடுத்துப் பெட்டியடி மேஜைமீது வைத்தார் முதலியார்.

கணக்கப் பிள்ளை அந்த நோட்டுக் கட்டுக்களைத் தொடவே இல்லை.

"இதென்ன இது, மூவாயிரத்தைக்குடுத்தா, அஞ்சுக்குக் குறைஞ்சி வாங்கிட்டுப் போனா, முதலாளி முகத்திலேயே முழிக்க முடியாது. தயவு செஞ்சி கொஞ்சம் பார்த்துக் குடுத்திருங்க" என்றார் பிள்ளை .

"இப்ப அவ்வளவுக்குத் தொகை இல்லையே. இருந்தா பெரிய முதலாளிக்காதவணைசொல்லப்போறேன்?"என்று இரங்கிய குரலில் வேண்டிக்கொண்டார் கைலாச முதலியார்.

"அதென்னமோ, இது ரொக்கப் பாவத்தாம். அதனாலே மொத்தமா வேணுமாம். அத்தோடே நூல் கொடுத்த பாக்கியையும் கேட்டுட்டு வரச் சொன்னாக" என்று விடாப் பிடியாகப் பேசினார் பிள்ளை.

கைலாச முதலியாருக்கு என்னபதில் சொல்வதென்றே தெரியவில்லை. கிடுக்கித் தாக்குதல் மாதிரி நாலா புறத்திலிருந்தும் நெருக்கடிகள் ஸ்தூலமாக முற்றி வந்து மோதுகின்ற நிலைமையைப் பிரத்தியட்சமாக உணர்ந்தார். அந்த உணர்ச்சியிலிருந்து மீளும் வகை தெரியாமல், 'முருகா முருகா' என்று முனகியவாறே எதிரே தொங்கிய ஆறுமுகப் பெருமானின் படத்தை நோக்கினார், புன்னகை ததும்பும் இன்முகத்தோடும், வள்ளி தெய்வானை சமேதராகவும், வைர வைடூரிய அலங்காரபூஷிதராகவும், வடிவேல் அழகராகவும் அபயக் கரம் காட்டி, அசையாது நின்றார் ஆறுமுகப் பெருமான். அந்த அபயக் கரத்திலிருந்து கைலாச முதலியார்மீது எந்தவித அருளும் சொரியப் போவதாகத் தெரியவில்லை. ஆறுமுகப் பெருமானையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த கைலாச முதலியார் திடீரென்று ஏதோ தீர்மானத்துக்கு வந்தது போல் பட்டறைப் பலகையிலிருந்து எழுந்து வீட்டுக்குள் சென்றார்.