பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


வாங்கினதும் உடனே தந்திருதேன்.உங்க கஷ்டம் எனக்குத் தெரியாதா? இல்லே, நம்ம கஷ்டம் உங்களுக்குத் தெரியாதா?" என்றுகூறிக்கொண்டே, பத்திரிகை கொண்டுவரும்பையன் வருகிறானா என்று மேற்கே எட்டிப் பார்த்தார்.

மேற்கே, கையெழுத்து மறையும் மாலை மயக்கம். இருள் இறங்கித் தெரியும் பாபநாச மலையில், அந்தி ஒளி கன்றிக் கட்டிப் போன ரத்தம் மாதிரி, நீலம் பாரித்துக் கறுத்துப்போயிருந்தது. மாலைக்கருக்கலின் பின்னணியில் தூரத்து ரயில்வே லைன் செம்மண் மோட்டின் மீது புல்லுக்கட்டுச் சுமந்து செல்லும் விவசாயப் பெண்களின் எடுப்பான தோற்றம் நிழலாட்டம் போன்ற காட்சிப் பிரமையை உண்டாக்கியது.

அந்தி மயக்கின் சோபையின் மீது முதலியாரின் கவனம் செல்லவில்லை. பத்திரிகைப் பையன் வருகிறானா என்றுதான் அவர் பார்த்தார். அவன் கண்ணில் தட்டுப் படாததைக்கண்டு சோர்வுற்ற முதலியார் வாயில்கூடிநின்ற தாம்பூல ரசத்தைத் துப்புவதற்காகப் பின்புறம் குனிந்தார்.

"வே, பாத்துத் துப்பும் வே" என்று திடீர்க் குரல் முதலியாரின் தலையை மேல் வாங்கியது.எதிரேசுப்பையா முதலியாரும் வேறு இருநெசவாளிகளும் வந்து நின்றார்கள்.

வடிவேலு முதலியார். எச்சிலை லாவகமாக எட்டித் துப்பி விட்டு, "வாங்கய்யா, இப்படி உட்காருங்க" என்று நகர்ந்து உட்கார்ந்தவாறே கூறினார். வந்தவர்கள் மூவரும் சரப் பலகைஎன்ற அந்தச் சங்கப் பலகையில் இடம் பெற்று அமர்ந்தனர்.

"வடிவேலு முதலியார்வாள், நீங்க என்ன நம்ம கைலாச முதலியார்வாளைக் கண்டு, அந்த விசயமாகக் கேட்டியளா?" என்று ஒரு நெசவாளி எதையோ ஞாபகப்படுத்தினார்.

"கூலி விசயம்தானே? அவுஹ ஊட்டுக்குப் போனேன்; அவுஹ ஊருக்கில்லியாம். கடேசிச் சுக்கிரவாரத்துக்காக,