பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


இப்போது அவருக்கு இருந்தது ஒரே ஒரு கவலைதான். தொழில் நெருக்கடியிலிருந்து எப்படி மீளுவது என்பதல்ல அந்தக் கவலை; கடன்காரர் தொல்லையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதுதான் அவரது கவலை; சிந்தனை. இந்தக் கவலையால், அவருக்கு இரவெல்லாம் சிவராத்திரி ஆயிற்று; தூக்கத்துக்குக் கூட அவர்மீது கருணை இல்லை. இரவு கழிந்து பகற்பொழுது வந்துவிட்டாலோ, ‘கடன்காரர்கள் வந்து நிற்பார்களே' என்ற கவலை ஒவ்வொரு கணமும் நச்சரித்துப் பயமுறுத்திப் பிடுங்கிக் கொண்டிருந்தது.

அன்றிரவு கைலாச முதலியாருக்குக் கண்ணே அயர வில்லை; படுக்கையில் கிடந்து நிலை கொள்ளாமல் அப்படியும் இப்படியும் புரண்டுப் புரண்டு புழுங்கித் தவித்துக்கொண்டிருந்தார்.அவரதுமனத்திலோஎண்ணற்ற சிந்தனைகள் முள்வாங்கிகளைப்போல் குத்திக் குடைந்தன; துன்புறுத்தின.

"பாவி! இந்தத் தாதுலிங்க முதலி என் குடியையே கெடுத்து விட்டானே.சண்டைக் காலத்திலே, இவன் கள்ள மார்க்கெட்டில் லட்ச லட்சமாய்ச் சம்பாதிக்கிறதுக்கு நான் தானே ஒத்தாசையா இருந்தேன்.அந்த நன்றி விசுவாசத்தைக் கூட மறந்துட்டானே. வியாபாரம் மந்தமாயிருக்கிற நேரம் பார்த்து மென்னியைப் பிடிச்சுட்டானே. . ரொக்கக் கடனுக்கும் நூல் வகை பாக்கிக்கும் ஒத்தைத் தேதியிலே பணத்தைக் குடுன்னு உயிரை எடுத்துட்டானே. துரோகி! நன்றி கெட்ட துரோகி_!"

அவரையும் அறியாமல் அவர் வாய் துரோகி' என்று முனகி ஓய்ந்தது.

தூரத்திலுள்ள போலீஸ் சாவடியில் இரவு மணி இரண்டு அடிக்கும் சேகண்டியோசை உள்வாங்கி மங்கி ஒலித்தது.

"பாவி! அவன் செய்த வஞ்சகத்தை நினைத்தால்? அன்னிக்கி அவன் எழவுக்கு ரூபாய் மூவாயிரத்தையும்