பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


முடித்தாள் தங்கம்.

'ராத்திரி தூங்கவா செய்தேன்?' என்று உள்ளூர முனகிக் கொண்டது கைலாச முதலியாரின் மனம். -

"சரி, மணியை அனுப்பி, உடனே டாக்டரைக் கூட்டிக் கொண்டாந்து காட்டச் சொல்லு. ஆறுமுகம் எங்கே?" என்று கேட்டவாறே கட்டிலைவிட்டு இறங்கி வந்தார் கைலாச முதலியார்,

ஆறுமுகத்திடம் போய் அவனது மார்பைத் தொட்டுப் பார்த்தார். தங்கம் சொன்னது போல் நெஞ்சில் தீப்பொறி பறக்காத குறையாகத்தான் சுட்டுக் கொண்டிருந்தது. கைலாச முதலியார் “முருகா' என்று முனகியவாறே எழுந்திருந்தார். புறவாசலுக்குச் செல்லுமுன் மணியைக் கூப்பிட்டு, டாக்டரை அழைத்துவரச் சொல்லி அனுப்பி வைத்தார்.

மணிடாக்டரை அழைத்துவந்தான்.

"டாக்டர். இவர்தான் என் தந்தை" என்று கைலாச முதலியாரை' டாக்டர் நடராஜனிடம் அறிமுகப்படுத்தி வைத்தான் மணி.

டாக்டர் வணக்கத்தோடு மரியாதை காட்டிக் கொண்டார். பிறகு ஆறுமுகத்தைப் பரிசோதித்துப் பார்த்தார்; வழக்கமான கேள்விகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். கைலாசமுதலியாரும் தங்கம்மாளும் டாக்டர் என்ன சொல்லப் போகிறாரோ என்று ஆவலுடனும், ஆதங்கத்துடனும் நின்று கொண்டிருந்தனர்.

ஸ்டெத்தாஸ்கோப்பையும், தெர்மாமீட்டரையும் தமது தோல் பைக்குள் வைத்து மூடியவாறே டாக்டர் மணியை நோக்கி ஆங்கிலத்தில் சொன்னார்:

"மிஸ்டர் மணி, இது டைபாய்ட் ஜுரம் என்றே நான் நம்புகிறேன். ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும். டிஸ்பென்சரிக்கு ஆள் அனுப்புங்கள், மருந்து தருகிறேன்."