உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213


மென்றால் அவர்கள் நெஞ்சில் அறிவு சுடர்விடவேண்டும், எல்லோரும் சமம் என்ற உணர்வு எல்லோருக்கும் வந்து விட்டால்.

"அறிவுப் புரட்சி அறிவுப் புரட்சி என்று அடித்துக் கொள்ளுகிறாயே, அறிவில் மட்டும் புரட்சி ஏற்பட்டால் போதுமா? இப்போது? என்னை எடுத்துக் கொள். எனக்கு இந்த மூடநம்பிக்கைகளில் ஒன்றும் நம்பிக்கை இல்லை மனிதனை மனிதனாகத்தான் நேசிக்கிறேன். இதனால் என் வாழ்க்கை மேம்பட்டு விட்டதா? சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைத்து கொள்வதால் மட்டும் ஒருவன் சொர்க்கத்துக்குப் போய் விட முடியுமா? அறிவு வேண்டும்; அந்த அறிவின் கொள்கை வெற்றிபெற நடைமுறைப் போராட்டம் வேண்டும். இல்லாவிட்டால். ஒன்றும் நடக்காது."

"பிரசாரத்தின் மூலம் அறிவைப் புகட்ட முடியாதா? மக்கள் வாழ்வை மேம்படச் செய்ய முடியாதா? எத்தனை அறிவியல் நூல்கள் உலகத்தின் கதியை மாற்றியிருக்கின்றன."

"வாஸ்தவம். பிரசாரம் உணர்வைத்தான் ஊட்ட முடியும்; வாழ்க்கைதான் அந்த உணர்வை ஸ்திரப்படுத்த முடியும்; ஆனால், நடைமுறை இயக்கம் தான் உணர்வின் வெற்றியை உருவாக்க முடியும். புஸ்தகத்தின் மூலம் மட்டும் புரட்சி உண்டாகிவிடுமா...?"

"நீ என்னதான் சொல்லுகிறாய்? மனம் உண்டானால் மார்க்கமில்லையா?"

"உண்டப்பா உண்டு. ஆனால் நீ என்ன நினைக்கிறாய் மனம் மாறினால் உலகமே மாறிவிடும் என்கிறாய். மனம் உண்டானால் மார்க்கமும் உண்டு என்று மட்டும் நினைக்கிறாய். ஆனால் மனமும் மனத்துக்கிசைந்த மார்க்கமும் ஒன்று. சேர்ந்தால்தான், கொள்கையும் நடைமுறையும் சிந்தையும் செயலும் ஒன்றுபட்டால்தான் விமோசனம் உண்டு..."