பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

221


படையெடுப்பு அவனை ஒரு போர் வீரனாக்குகிறது. காதல் வாழ்வின் முதற்படியிலே காலை வைத்த அந்த இளைஞன் தன் காதலி நடாஷாவுடன் இன்பகரமாக வாழ இயலவில்லை. நடாஷா நாஜி கெஸ்டபோக்களின் கையில் சிக்குகிறாள். ஐவனோவ் போர்முனை செல்கிறான். மூர்க்கத்தனமான நாஜியரை எதிர்த்துத் தாக்கிப் பின்வாங்கச் செய்கின்றனர். சோவியத் வீரர்கள் முன்னேறி வரும் சோவியத்செஞ்சேனை ஐவனோவின் சொந்த ஊரை மீட்கிறது. அந்தப் படையிலிருந்த ஐவனோவ் தான் ஆடிப்பாடித் தவழ்ந்து திரிந்த தனது பிறந்த வீட்டை வெறும் குட்டிச்சுவராகத்தான் காண்கிறான்.கிழிந்து தும்பு தும்பாய்ப்போன தன் தாயின் துணிமணிகளின் மிச்ச சொச்சங்களை அந்த இடிபாடுகளுக்கிடையே கண்டு மனம் வெதுப்பி விக்கி விக்கி அழுகிறான். அவனுக்குத் தெரிந்த உள்ளூர் நண்பர்கள் ஐவனோவைத் தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார்கள்; நடாஷாவுக்கு நேர்ந்த கதியையும் சொல்கிறார்கள்.ஆனால் ஐவனோவோ அதைக் கேட்டு ஒப்பாரி வைக்கவில்லை; நாஜியரின் மீது அவனுக்குள்ள ஆத்திரம்தான் அதிகரிக்கிறது "நான் உங்களோடு தங்க மாட்டேன் நான் இன்னும் முன்னேறிச் செல்லவேண்டும்!"என்று உறுதியோடு தன் நண்பர்களிடம் சொல்லி விட்டு படையினரோடு சேர்ந்து கொள்கிறான்...

சங்கரின் மனத்தில் ஐவனோவின் அந்த உறுதி கணீரென ஒலித்துக் கொண்டிருந்தது. காதலி சிறைப் படுத்தப்பட்டான் என்று கேட்ட போதும் ஐவனோவ் சித்தம் கலங்கவில்லை; காதலையும்விட, பெரிதான கடமைதான் அவன் மனத்தில் மேலோங்கி நின்றது...

"ஆமாம். மனிதனுக்குக் காதல் ஒன்றுதானா வாழ்க்கை ? காதல் வாழ்க்கையின் ஒரு அம்சம். அதற்குப் பங்கம் நேர்ந்தால்வாழ்க்கையே அத்தோடு முடிந்துவிட்டது என்று அர்த்தமா? மனிதனுக்கு வாழ்க்கை தான் லட்சியம்...”

காதலைப் பற்றிய இந்த எண்ணம் தோன்றியவுடனேயே சங்கருக்குக் களலாவின் ஞாபகம் வந்தது.