பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229


"தம்பி, ஒண்ணு சொல்ல மறந்து போச்சே! வர்ர வழியிலே அம்மன் கோயில் மண்டபத்துப்பக்கம் வடிவேலு முதலியார்வாளைச் சந்திச்சேன். அவுக உங்களை எதிர் பார்த்துக் காத்துக்கிட்டு நிக்காக. நீங்க போங்க"

சங்கரும் அதை ஏற்றுக் கொண்டவனாக இடத்தை விட்டு எழுந்திருந்தான்.

"நான் வாரேன், பெரியவரே"

"சரி தம்பி"

இருளப்பக் கோனார் சொன்னபடியே வடிவேலு முதலியார் அம்மன் கோயில் மண்டபத்தில்தான் இருந்தார்;அவரைச் சுற்றிலும் வேறு பல நெசவாளிகளும் கூடியிருந்தனர்.

கைலாச முதலியாரின் மரணத்துக்குப் பின்னர், அம்மன் கோயில் மண்டபம் அதற்கு முன் இல்லாத கலகலப்போடு விளங்கியது. மாலை நேரங்களில் அங்கு குறைந்த பட்சம் இருபது நெசவாளிகளாவது ஒன்று கூடி விடுவார்கள். அவர்கள் அனைவரும் வடிவேலு முதலியாரின் தலைமையில் உலக விவகாரங்களையும் கைத்தறித் தொழில் நெருக்கடியைப் பற்றியும் தத்தம் அபிப்பிராயங்களைப் பரிமாறி விவாதித்தார்கள். சங்கரிடமிருந்து அவ்வப்போது தாம் வாங்கி வரும் சில அரசியல் பத்திரிகைகளை, வடிவேலு முதலியார் அந்த நெசவாளிகளுக்கு வாசித்துக் காட்டுவார். அந்தப் பத்திரிகைகளில் தொழிவாளிகள், விவசாயிகள், நெசவாளிகள் முதலிய மக்களின் போராட்டங்களையும், இயக்கங்களையும்பற்றிய செய்திகள் வெளிவந்தன. கூலி வெட்டு, ஆள் குறைப்பு: கதவடைப்பு முதலியவற்றை எதிர்த்துப் பற்பல தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்கள், வரிவஜா கோரி, கஞ்சித் தொட்டி கேட்டு, பஞ்சப் பிரதேசத்திலுள்ள விவசாயக் குடிபடைகள் நடத்தும் இயக்கங்கள்,