பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230


ஊர்வலங்கள் இப்படி எத்தனையெத்தனையோசெய்திகள் பற்றிய விவரங்கள் அந்தப் பத்திரிகைகளில் காணப்பட்டன. வடிவேலு முதலியார் அந்தப் போராட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தொண்டையைக் கனைத்து உற்சாக் மூட்டியவராக, சாங்கோபாங்கமாகவாசித்துக் காட்டுவார் அத்துடன் சங்கம் வைப்பதால் உண்டாகும் நன்மைகளை எடுத்துச்சொல்லி அந்தநெசவாளிகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவார்.

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற உண்மையை அந்த நெசவாளிகள் சில தினங்களுக்கு முன்னர் நிதர்சனமாகக் கண்டுணர்ந்திருந்தார்கள். சென்ற மாத இறுதியில் உள்ளூர் ஜவுளி வியாபாரிகள் நெசவாளிகளுக்குக் கிடைத்து வந்த பாவக் கூலியைக் குறைக்க முயன்றார்கள்; குறைந்த கூலிக்கு வேலை செய்யச் சம்மதிக்காவிட்டால், நூல் தரமாட்டோம் என்றும் சிலர் பயமுறுத்தினார்கள். ஏற்கெனவே அந்த நெசவாளிகளுக்கு பாவுக்குப் பதினைந்து ரூபாய்க்கூடக் கூலி கிடைக்கவில்லை. எனவே அந்தப் பஞ்சக் கூலிக்கும் வினை பிடித்து விட்டது. என்றறிந்தவுடன் நெசவாளிகள் பதைபதைத்தார்கள். வடிவேலு முதலியாரோ அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டி, கூலிக் குறைப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துவதென்று தீர்மானித்தார். அதன் பின் அவர் சங்கரிடம் கலந்தாலோசித்துக் கொண்டு, தமது தலைமையில் சுமார் முப்பது தொழிலாளரை ஒன்று திரட்டி ஊர்வலமாகச் சென்று, அம்பாசமுத்திரம் தாசில்தாரைச் சந்தித்தார்; நெசவாளிகள் தத்தம் கஷ்ட நஷ்டங்களைத் தாசில்தாரிடம் எடுத்துச் சொன்னார்கள். அதன்பின் தாசில்தாரின் தலையீட்டின் பேரில், அவர்களுக்குக் கிடைத்து வந்த பஞ்சக் கூலி தப்பிப் பிழைத்தது. இந்தச் சம்பவம் நெசவாளிகள் பலருக்கும் சங்க உணர்வையும் தன்னம்பிக்கையையும் ஊட்டியது; வடிவேலு முதலியாரும் முன்னை விட உற்சாகத்தோடு வேலை செய்தார்.