பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240


சிந்தனையை மூழ்கடித்து அவள் உள்ளத்திலே சோகம் பெருக்கெடுத்தது. கண்ணில் முட்டி மோதிய கண்ணீர் அவனையும் அறியாமல் உருண்டு சிதறியது. சங்கரும் அவள் நிலைமையைக் கண்டுணர்ந்தான்.

"கமலா!"

கமலா ஏறிட்டுப் பார்த்தாள்.

"இதோ பார். உன் மீது எனக்கு அனுதாபம் இல்லாமலில்லை. உன் நிலைமையை நித்த நித்தம் கண்டு மனம் புண்பட்டதாலேயே, நான் இப்படிப் பேச நேர்ந்தது. என்னை மன்னித்துக்கொள். ஆனால், அதே சமயம் நீயே யோசித்துப் பார். சிறந்ததொரு லட்சியப் பெண்ணாக வாழவேண்டிய நீ ஒரு கோழையின் காதலை எண்ணி உருக்குலைந்து கொண்டிருப்பதா? வாழ்க்கை என்பது காதலுடனும் கல்யாணத்துடனும் முடிந்து விடுகிறதா? நமக்கென்று வேறு பல கடமைகள் இல்லையா? அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டாமா?" என்று தன் குரலின் சுருதியையே மாற்றிக் கொண்டு பேசினான் சங்கர்.

கமலா அவனுக்குப் பதில் கூறவில்லை; இன்னது கூறுவது என்றே அவளுக்குத் தெரியவில்லை.

சங்கரே மீண்டும் பேசினான்:

"எம் பேச்சு உன் மனத்தை மேலும் புண்படுத்தியிருக்கும். ஆனால், அதில்தான் உன் மன நோய்க்குரிய மருந்தும் இருக்கிறது. இதை நீயே சீக்கிரம் உணர்ந்து கொள்வாய்."

அத்தானைப்பற்றி ஏதாவது தகவல் விசாரிக்கலாம் அல்லது சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டாவது வரலாம் என்று நினைத்து வந்த கமலாவுக்கு, சங்கரின் பேச்சு எதிர்பாராத தாக்குதல் போல இருந்தது அவளுக்கு. இன்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை; பொங்கி வந்த