பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248


ஊழியர்கள் அவன் வாயில் தண்ணீர் ஊட்டினார்கள்; தண்ணீர் தொண்டைக் குழியை நனைத்தவுடன் அவனுக்குச் சிறிது தெம்பு வந்தது. கையை ஊன்றி எழுந்து உட்கார்ந்தான் எதிரே கூடிநின்ற கூட்டத்தைத் திருகத்திருக விழித்துப் பார்த்தான். அவனுக்கு நடந்து போன நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு மீண்டன; அந்த நினைவின் அதிர்ச்சி அவன் முகத்தில் பிரதிபலித்தது.

"இப்போ எப்படி இருக்கு?" என்று பரிவோடு கேட்டார் ராஜு.

அவன் அதற்குப் பதில் பேசவில்லை . சிறிது நேரம் கழித்து, 'பசிக்குது!' என்று அடைபட்ட குரல் அவன் தொண்டைக் குழியிலிருந்து திமிறிப் பிறந்தது.

உடனே ராஜு எதிர்த்தாற்போலுள்ள நாயர் ஹோட்டலிலிருந்து ஏதாவது டிபன் வாங்கி வரச் சொன்னார்; ஊழியர்கள் இட்டிலியும் டீயும் வாங்கி வந்தார்கள்.

"இதைச் சாப்பிடுங்கள்" என்று வேண்டிக்கொண்டார் ராஜு. அவன் அவற்றை மெதுவாகச் சாப்பிட்டு முடித்து விட்டு, கையைக் கழுவி முடித்ததும் மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டான்.

"இவ்வளவு பசி இருந்தும்கூட ஊர்வலத்தில் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?" என்று வியப்போடு கேட்டார் ராஜு,

அவன் அவ‌ர் முகத்தை ஏறிட்டுப்பார்த்தான்.

"என்னையும் அறியாமல்தான் வந்து சேர்ந்து கொண்டேன். ஊர்வலத்தைப் பார்த்ததும், என்னமோ ஒரு ஆவேசம் என்னை அதில் கொண்டு தள்ளியது. பசி கூடத் தெரியலை" என்று வெள்ளைக் குரலில் பதில் சொன்னான் அவன். பிறகு அவன் அன்பும் ஆதரவும் பொங்கிப் பிரதிபலிக்கும் ராஜுவின் கண்களை வெறித்து நோக்கியவாறே, "ஐயா, என்னைக் காப்பாற்றியதற்கு,