பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252


எத்தனை துன்பங்கள்! - ஒரு சட்டைக்காரத் துரை அவனை நாயை விட்டு விரட்டியடித்தான்; ஆபீஸிலுள்ள லேடி டைபிஸ்டோடு சரச சல்லாபம் நடத்திக் கொண்டிருந்த ஒரு கம்பெனி மேனேஜர் அவன் மீது காரி உமிழ்ந்தான்; ஒரு கருணையற்ற ஹோட்டல் முதலாளி அவன் மீது வெந்நீரைக் கொட்டி விரட்டியடித்தான்!....

அவனது கண்ணீரையும் கதறலையும் பசியையும் பட்டினியையும் பொருட்படுத்த, கருணை காட்ட, அவனுக்கு வேலை தர யாரும் முன் வரவில்லை; அவன் அந்த நகரத்தில் நாய் மாதிரித் திரிந்தான்; நாய் மாதிரித் தெரு ஓரங்களில் படுத்துத் தூங்கினான். பசித்து அழுதான்; கண்ணீர் விட்டான்.

கடைசியில் அவனும் அந்த நகரங்களிலுள்ள ஏழை பாழைகளைப்போல், கூலிவேலை தேடியலைந்தான். அந்த பிழைப்புக்கும் ஆயிரம் போட்டி; அடிபிடி. எனினும் உயிராசை அவனையும் அந்தப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது. அவனும் ரயில், பஸ், பிரயாணிகளின் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிப் பிழைத்தான். பெட்டியடி, டீ ஹோட்டல்களில் பத்துப் பாத்திரம் துலக்கி ஒரு வேளைப் பாட்டைக் கழித்தான், கை வண்டி இழுக்கத் துணையாளாகச் சென்றான்; துட்டுக் கிடைத்த வேளையில் வயிற்றைக் கழுவினான்; கிடைக்காத வேளையில் பட்டினி கிடந்தான்.

அவனுக்கு வாழ்க்கையே மரத்துப் போய் விட்டது; மாறிப் போய் விட்டது. அவன் கமலாவை மறந்தான்; தாயை மறந்தான்; ஊரை மறந்தான்; உற்றாரை மறந்தான். எனினும் அவன் தன் சாண் வயிற்றை மட்டும் மறக்கவில்லை; மறக்க முடியவில்லை.

அந்த நாட்களில் அவன் உயிர் வாழும் போராட்டத்தின் சகல குரூரங்களையும் கண்டான்; அனுபவித்தான். ஒரு உருண்டைச் சோற்றுக்காகச் சண்டை பிடிக்கும்