பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284


'ஒன்றுமட்டும் தெரிகிறது. வீரையாவை ராஜுவுக்குத் தெரியும். வீரையா எங்கிருக்கிறான்? அவனைப் பற்றி ராஜு ஒருமுறை கூடப் பிரஸ்தாபித்ததில்லையே. ஒரு வேளை அவனும் இவரை மாதிரி எங்கேனும் தேச சேவை செய்கிறானா? அல்லது சிறையில் இருக்கிறானோ...?'

மணியின் மனம் அந்தப்படத்தை வைத்துக்கொண்டு என்னென்னவோ சந்தேகங்களை வாரியிறைத்து மேலே போட்டுக்கொண்டு, அவற்றின் பாரத்திலிருந்து வெளிவர முடியாமல் திணறிக்கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் ராஜுவும் இங்கில்லையே என்று அவன் மனம் மீண்டும் மீண்டும் எண்ணியெண்ணி வருந்தியது. அவன் அந்தப் படத்தைப் பற்றிய மர்மத்தை அறிந்து கொள்ளத் துடியாய்த் துடித்தான். அந்தப்படத்தைக் கையோடு எடுத்துக்கொண்டு ராஜுவை நன்கறிந்த நெசவாளர் ஊழியர்களைத் தேடிச் சென்றான். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்தப் படத்தைக் காட்டி, இந்தப் படத்திலுள்ளவர்களைத் தெரியுமா?' என்று கேட்டான். 'ராஜுவுக்கும் இருளப்பக் கோனாருக்கும் என்ன சம்பந்தம்' என்று விசாரித்தான்.

அவனுக்கு உண்மை புலப்பட வெகுநேரம் ஆகவில்லை.

"இந்தப் படத்திலுள்ளவர்களை எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லுகின்ற வீரையாவை எனக்குத் தெரியும்!" என்று அமுத்தலாகப் பதில் அளித்தார் ஒரு ஊழியர்.

"வீரையாவை உங்களுக்குத் தெரியுமா?" என்று வியந்து கேட்டான் மணி.

"நம்ம யூனியன் காரியதரிசி ராஜுதான் வீரையா!" என்று நிர்விசாரமாய்ப் பதில் அளித்தார் அவர்.

"என்னது?" என்று பிளந்த வாய் மூடாமல் பிரமித்து நின்று விட்டான் மணி.