பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

285


"என்ன? உங்களுக்கு இத்தனை நாள் தெரியாதா?"

அவன் மனத்தில் ஒரு புறத்தில் மகிழ்ச்சியும், மறு புறத்தில் ஆச்சரியமும் மாறி மாறித் தோன்றின; அவனால் தன் மகிழ்ச்சியையோ, ஆச்சரியத்தையோ வார்த்தை வடிவில் வெளியிட முடியவில்லை; திடீரென்று தன்னை ஆட்கொண்ட உணர்ச்சிப் பரவசத்திலிருந்து மீண்டு, தன்னிலைக்கு வர அவனுக்குச் சிறிது நேரம் பிடித்தது.

உடனே மணி அந்த ஊழியரைக் கையோடு சங்கத்துக்குக் கூட்டி வந்து அவரிடம் ராஜுவின் வரலாற்றையெல்லாம் ஆர்வத்தோடு விசாரித்துக் கேட்டான். அந்த ஊழியரும் ராஜுவைப் பற்றித் தாம் அறிந்திருந்த செய்திகளையெல்லாம் விளக்கிச் சொன்னார்.

-ராஜுவின் சொந்தப் பெயர் வீரையாதான். கடந்த வருஷங்களில் காங்கிரஸ் சர்க்கார் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டபோது, ராஜு தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அந்தக் காலத்தில் தான் அவர் தம் பெயரை 'ராஜன்' என்று மாற்றி வைத்துக் கொண்டார். நெசவாளர்களுக்கு ராஜு என்ற பெயரே பழகிப் போனதாலும், பிடித்திருந்ததாலும், வீரையா அந்தப் பெயரையே ஸ்திரமாக்கிக் கொண்டார். நெசவுத்தொழிலாளர் சங்கத்தில் பணியாற்றுவதற்கு முன்பு அவர் மதுரையிலுள்ள பஞ்சாலையில் வேலை பார்த்தார். பஞ்சாலைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய காலத்தில் ராஜு முன்னணியில் நின்று போரடினார். பின்னால், அவரைப் பழி வாங்கும் நோக்கத்தோடு பஞ்சாலை நிர்வாகஸ்தர்கள் அவர் ஒரு பயங்கர அரசியல்வாதி என்ற குற்றத்தைச் சாட்டி, வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள். அது முதற்கொண்டு அவர் தொழிலாளர் நலனுக்காகப் பாடுபடுகிறார். நெசவாளர் சங்கத்தின் காரியதரிசியாக இருந்து பணியாற்றி வருகிறார்.பஞ்சாலையில் வேலை பார்ப்பதற்கு முன்னால்,