பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310


தாதுலிங்க முதலியாரின் பேச்சைக் கேட்டதும் மணி சீறியெழுந்தான்.

"முதலியார்வாள் மரியாதையாய்ப் பேசுங்கள், அப்புறம் மரியாதை கெட்டுப்போகும்!" என்று உள்ளடங்கிய கோபத்தோடு எதிரொலி கிளப்பினான்.

"உங்கிட்டே என்னடா பேச்சு. என்று சீறியவாறே தாதுலிங்க முதலியார் கமலாவிடம் திரும்பினார். "கமலா வா வீட்டுக்கு, ம்!" என்று அதிகார தோரணையில் உறுமினார்.

கமலா இன்னது செய்வதெனத் தெரியாமல், தந்தையின் முன்னால் ஓடிச் சென்று நின்றவாறே, "அப்பா, உங்க கோபம் இன்னம் மாறலையா? அத்தானை ஏன் திட்டுறீங்க?" என்று பரிதாபகரமாகக் கேட்டாள்.

"இந்தப் பரதேசிப் பயலை அத்தான் என்று சொல்ல உனக்கென்னடி அத்தனை ஆணவம்?" என்று கடுகடுத்தார் முதலியார்.

கசையடிப்பட்ட சிங்கத்தைப்போல், மணி அந்தச் சொல்லைக் கேட்டுப் பொறுமையிழந்து தாதுலிங்க முதலியாரைத் தாக்க விரும்பிச் சாடினான்; அதற்குள் அருகிலிருந்த ராஜு அவனை இழுத்துப் பிடித்துத் தடுத்தார்.

கமலா தன் தந்தையின் கோபாவேசத்தைத் தாங்கி நிற்க முடியாமல், மன்றாடினாள்: "அப்பா, உங்கள் பெண் நல்லபடியாய் வாழ்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நான் மணந்தால் அத்தானைத்தான் மணப்பேன். இல்லாவிட்டால் என் பிணத்தைத்தான் காண்பீர்கள்?" என்று உறுதியோடு பேசினாள் கமலா. அவளையும் மீறி அவள் கண்களில் நீர் பெருக்கெடுத்தோடியது.

"என்னடி, நாடகமாடுறே?" என்று கிண்டலும் கோபமும் கலந்த குரலில் சினந்து குமுறியவாறு, தாதுலிங்க