பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


 "இதென்ன முதலாளி, அன்னிக்கி ஊர்க் கூட்டத்திலே_" என்று ஆரம்பித்தார் வடிவேலு.

ஊர்க் கூட்டத்திலே முடிவு பண்ணிட்டா, உடனே அதற்கு. நாங்க கட்டுப்படணும்னு கட்டாயமா? இஷ்டமிருந்தா நூல் தாரோம்; இல்லேன்னா இல்லை" என்றார் மைனர் முதலியார்.

"ஆமா, வே. உங்களுக்குக் கூலி உசத்திக் குடுத்து, இங்கே துணியை வாங்கி அடுக்கிவைக்கிறதைவிட, இருக்கிற நூலை மட்டும் வித்தாலே எங்கள் வியாபாரம் நடந்துட்டுப்போகுது. நூலுக்கின்னாலும் என்னிக்கும் கிராக்கி உண்டு", என்று, வியாபார சூட்சுமத்தை விட்டுச் சொல்லி பயமுறுத்தினார் பெரிய முதலாளி.

"உழைக்கிறதுக்குத்தானே, முதலாளிகூலியை உசத்திக் கேக்கிறோம்? சும்மா, தானமா கேக்கிறோம்?" என்று வாய்விட்டுக் கேட்டார் வடிவேலு.

இதைக் கேட்டதும் தாதுலிங்க முதலியாருக்குச் சுருக்கென்றது.

"அட சரிதாம்வே! இப்பக் குடுக்கிற கூலி உங்களுக்குக் கட்டாமலா போச்சி? உங்களுக்கெல்லாம் கூலியை உசத்தியே குடுக்கப்படாது. குடுக்கிற துட்டையெல்லாம் காப்பிக் கடைக்கும் சினிமாக் கொட்டகைக்கும் அழுது தொலைச்சிட்டு, காணாது காணாதுன்னு எங்கய்யா போறது!" என்று அடித்துப் பேசினார், தாதுலிங்க முதலியார்.

மைனர் முதலியாரும் சும்மா இருக்கவில்லை; பெரிய முதலாளியைத் தொடர்ந்து பின்பாட்டாக ஒரு ஆவர்த்தம் பாடி முடித்தார்;

"...எதுக்கு நின்னுகிட்டு இருக்கிய? நாங்க ஒண்ணும் ஊர்க் கட்டுப்பாட்டுக்கு ஒத்துக்கிட முடியாது: இது அம்மன் கோயில் விவகாரமில்லை. வியாபார விசயம்.