பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


 "என்னங்க, குமாஸ்தாப்பிள்ளைவாள். போன ஊர்க் கூட்டத்திலெ எங்களுக்குக் கூலியை உசத்தித் தீர்மானம் பண்ணினது உங்களுக்குத்தெரியாதா? பெரிய முதலாளியும் இருந்துதானே தீர்மானிச்சாக!" என்று குமாஸ்தாவின் 'அப்பாவித்தன'த்தைச் சுட்டிக் காட்ட முனைந்தார் ஒரு அப்பாவி நெசவாளி.

"எல்லாம் தெரியும். அதனாலேதான் பழைய கூலின்னு சொன்னேன்" என்றார் குமாஸ்தா.

"இதென்னய்யா இது? ஊர்க் கூட்டத்திலே ஒண்ணு தீர்மானிக்கிறது, இங்கே வந்தா இப்படிச் சொல்றது. இதென்ன நியாயம்?" என்று ஆத்திரத்தோடு கேட்டார் வடிவேலு.

"வடிவேலு முதலியார்வாள், எல்லாம் முதலாளி உத்தரவு. நாங்க அதை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. வேணுமானா, நீங்க முதலாளியையே. ஒரு வார்த்தை கேட்டுக்கிடுங்க. அவுஹ உள்ளேதான் இருக்காக" என்று கூறிக்கொண்டே, குமாஸ்தா உள்ளே இருந்த ஒரு அறையைச் கட்டிக்காட்டினார்.

தறிகாரர்கள் அனைவரும் அந்த அறையை நோக்கிச் சென்றார்கள்.

"என்னவே, எங்கே வந்தீங்க?" என்று உள்ளேயிருந்த மைனர் முதலியார் கேட்டார். மைனர் முதலியாருக்கு எதிர்த்தாற்போலுள்ள மேஜை முன்னால், தாதுலிங்க முதலியார் மின்சார விசிறியின் சுகானுபவ லஹரியிலே மூழ்கியவராக அமர்ந்திருந்தார்.

தறிகாரர்கள் வந்த விஷயத்தை விளக்கினார்கள்.

"பழைய கூலிக்கு நெஞ்சி குடுக்கிறதானா, நூல் வாங்கிக்கிட்டுப் போங்க; இல்லேன்னா, கூலி கூட்டித் தர்ர மாராசனைப் பாருங்க" என்று சுருக்கமாகச் சொன்னார் பெரிய முதலாளி.