பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


 பூஜை அறையை விட்டு வெளியே வந்த கைலாச முதலியார் வந்ததும் வராததுமாய் ஆறு முகத்தை நோக்கித் திரும்பினார்.

"ஏண்டா ஆறுமுகம், கொஞ்சம் மெள்ளப் படிச்சா என்னடா? நீ படிக்கிறது எட்டு வீட்டுக்குக் கேக்கணுமா?" என்று கண்டிப்பும் அன்பும் கலந்த குரலில் கடிந்து கொண்டார். ஒரு வேளை அவன் போட்ட சத்தம் பூஜையிலே அமர்ந்திருந்த கைலாச முதலியாரின் காதில் அசரீரி மாதிரி ஒலித்ததோ, என்னவோ?

கைலாச முதலியாரின் சண்டனத்துக்குப் பின் ஆறுமுகம் பாட்டை மனத்துக்குள்ளேயே படிக்கத் தொடங்கிவிட்டான். கைலாச முதலியார் நடையிலிருந்த திருநீற்றுக் கப்பரையிலிருந்து ஒரு விரல் திருநீற்றை எடுத்து நெற்றியிலும் உச்சியிலும் வாயிலும் இட்டுவிட்டு, 'முருகா' என்று இலைமுன் உட்கார்ந்தார். சாப்பிட்டுவிட்டுக் கையைக் கழுவும்போது, "இருளப்பன் கோனாரை எங்கே? இன்னம் வரலியா?"என்று மனைவியை நோக்கிக் கேட்டார்.

"நீங்கதானே எங்கேயோ போயிட்டு வரச்சொன்னீக"' என்றாள் தங்கம்,

கைலாசமுதலியாருக்கு அப்போதுதான் தமதுஞாபக மறதியைப் பற்றிய உணர்வு வந்தது. "ஆமா ஆமா. மறந்தே போச்சு” என்று தமக்குத்தாமே கூறிக்கொண்டு கூடத்துக்கு வந்தார்.

தன் புருஷனிடம் இதுநாள்வரை இல்லாத ஞாபக மறதியை உணர்ந்த தங்கம்மாள், 'என்ன கவலையோ? எல்லாம் அவுஹளுக்கு வரவர அயர்த்து மறந்து போவுது. கேட்டாலும் சொல்லுவாஹளா?” என்று மனத்துக்குள்ளாகவே சிந்தித்து, அந்தச் சிந்தனையின் பாரத்தை ஒரு நீண்ட பெருமூச்சின் மூலம் இறக்கி வைத்தாள்.