பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


 "அதுக்குச் சொல்லலே. நாள் ஆக ஆக அசலும் வட்டியும் ஏறிக்கிட்டேதானே போகுது. உங்களுக்கே தெரியாதா? ஒரு வழியா அதை அடைச்சிட்டா ரெண்டு பேருக்கும் நல்லது."

"அடைக்காமலா இருக்கப் போறேன், இப்போ . நிலவரம் நீங்க தெரியாததா? கொஞ்சம் போகட்டும்."

"நிலவரத்தைப்பார்த்தாமுடியுமா? அலை எப்பஓயும், தலை எப்பமுழுகன்ன கதைதான்.உங்கள்ட்டேகண்டிச்சும் சொல்லக்கூடாது. தாய் பிள்ளையானாலும் வாய் வயிறு வேறெதானே. அப்படியில்லாட்டா, வியாபாரம் நடக்குமா. நீங்க எப்படியும் இந்த மாசக் கடேசிக்குள்ளே ஒரு வழி பண்ணித்தான் ஆகணும்"

"நீங்களே இப்படிச் சொன்னா? எல்லாம் இந்தமாசம் பொறுத்துக்கிடுங்க அப்புறம் நானே வந்து தகவல் சொல்கிறேன்."

"தகவல் என்ன, பணத்தோடே வர்ரதுக்குப் பாருங்க: அப்புறம் என்னைக் குறை சொல்லிப் புண்ணியமில்லே."

இதற்குள் தங்கம்மாள் ஒரு வெள்ளித் தம்ளரில் பசும்பாலைக் கொண்டுவந்து தாதுலிங்க முதலியாரின் எதிரே வைத்தாள்.

"சீனி போடலியே?" என்று கேட்டுக் கொண்டே பாலைக் குடித்து முடித்தார், தாதுலிங்க முதலியார். பிறகு இடத்தைவிட்டுஎழுந்திருந்தவாறே, கைலாசமுதலியாரைப் பார்த்து "அப்ப நான் வரட்டுமா? நான் சொன்னதை மறந்துடாதீங்க" என்று கூறிவிட்டு, தங்கம்மாளை நோக்கி "வரட்டுமாம்மா"என்றார்.

"சரி, அண்ணாச்சி' என்றாள் தங்கம்.

சில விநாடிகளில் வாசலில் நின்ற பியூக் கார் பயங்கரமாக ஹூங்காரமிட்டு உறுமி எச்சரித்து விட்டுப் பறந்து சென்றது!