பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எருதும் சிங்கமும்

11

"அதைப் பற்றி நமக்கென்ன கவலை? அதைத் தெரிந்துகொள்வதால் நமக்கென்ன இரை கிடைக்கப் போகிறதா, அல்லது பெருமை கிடைக்கப்போகிறதா. தனக்குத் தொடர்பில்லாத ஒரு காரியத்தில் தலையிடுகிறவன் ஆப்புப் பிடுங்கிய குரங்கு போல் அவதிப்பட வேண்டியது தான்" என்றது இன்னொரு நரி.

“அப்படியல்ல. என்ன இருந்தாலும் சிங்கம் நம் அரசன். அரசர்களுக்குப் பணி செய்வது பெருமையானது. அதனால் பெரியோர்களுடைய நட்பு உண்டாகும்; பல உதவிகளும் கிடைக்கும். நாய்கள், ஈரம் சிறிதும் இல்லாத எலும்பையும், பல்லசையும் வரை விடாமல் கெளவிக்கடித்துத்தின்னும். ஆனால் மிகுந்த பசியோடிருக்கும் சிங்கமோ மதயானையை அடித்துக் கொன்று தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுமேயல்லாமல், சிறிய உயிர்களைக் கொல்லாது. நாய், ஈனத்தனமாகத் தன் வயிற்றை ஒடுக்கி வாலைக் குழைத்துக் குழைத்து முகத்தைப் பார்த்துக் கெஞ்சி எச்சிலை வாங்கியுண்ணும். ஆனால் யானையோ, எவ்வளவு பசியிருந்தாலும், சிறிதும் கெஞ்சாது. தன் பாகன் வலியக் கொண்டு வந்து ஊட்ட ஊட்ட உணவை யுண்ணும். இப்படிப்பட்ட பெருமையுடையவர்களோடு சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை" என்றது முதல் நரி,

"சிங்கத்திற்கு நாம் அமைச்சர்கள் அல்லவே, இதைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?" என்று மறுத்தது இரண்டாவது நரி.