பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை

171


கேட்டது. "நண்பா, இதுவரை நான் உன்னைப் பிரியாமல் இருந்தேன். இப்போதோ என் மனைவி நோயாகக் கிடப்பதால் உன்னைவிட்டுப் பிரிந்து போக வேண்டி இருக்கிறது. அதுதான் கவலையாக இருக்கிறது” என்றது முதலையரசன்.

"இப்போதே போய்வா. இதற்கெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது!" என்று குரங்கு பதில் அளித்தது.

"உடனே போகத்தான் வேண்டும். ஆனால் உன்னைப் பிரிந்து என்னால் ஒரு கணமும் இருக்க முடியாது. ஆகையால் நீயும் என்னோடு வரவேண்டும்?" என்று முதலை கேட்டுக் கொண்டது.

“நீயோ நீரில் இருப்பவன்; நானோ தரையில் வாழ்பவன். நான் எப்படி உன்னோடு வர முடியும்?” என்று கேட்டது குரங்கு.

“என் முதுகில் ஏறிக் கொண்டு வா. போய் விரைவில் திரும்பி விடலாம்" என்றது முதலை.

அவ்வாறே குரங்கு முதலையின் முதுகில் ஏறிக் கொள்ள அது தன் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டது. போகும் வழியெல்லாம் முதலையின் மனம் குழம்பிக் கொண்டே இருந்தது.

"பொன்னின் தரத்தைக் கல்லில் உரைத்துக் காண்பார்கள். மனிதனின் தரத்தை அவர்களின் சொல்லைக் கொண்டு தெரிந்து கொள்வார்கள். அறிவில்லாத வஞ்சகர்களின் தரத்தோடு ஒப்பிட்டு