பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

பஞ்ச தந்திரக் கதைகள்

'இந்தக் குரங்கு என்ன சொக்குப் பொடி தூவியதோ, நம் அரசர் இதை விட்டுவர மறுக்கிறார். இந்தக் குரங்கைத் கொன்றால்தான் இதற்குப் புத்தி தெளியும்’ என்று நினைத்தது அந்தத் தூதி முதலை. அது முதலையரசனைப் பார்த்து, “மன்னவா, அரசியாருக்கு நாங்கள் எத்தனையோ மருந்து கொடுத்துப் பார்த்து விட்டோம். நோய் தீர வில்லை. குரங்கின் ஈரல் கொண்டு வந்து கொடுத்தால்தான் பிழைப்பாளென்று பெரிய மருத்துவர் சொல்கிறார். நீங்கள் அதற்கு வேண்டிய ஏற்பாட்டுடன் உடனே வர வேண்டும். இல்லா விட்டால் அரசி உயிருக்கே ஆபத்தாய் முடியும்’ என்று சொல்லியது.

இதைக் கேட்டதும்‌‌ முதலையரசனின் மனம் குழம்பியது. குரங்கின் ஈரலுக்கு அது எங்கே போகும். அதற்குத் தெரிந்தது ஒரே ஒரு குரங்கு தான். தினமும் பழம் பறித்துப் போடும் உயிர் நண்பனான அந்தக் குரங்கைக் கொல்வது பாவம். அதைக் கொல்லாமல் இருந்தால் முதலையரசி இறந்து போய் விடும். நண்பனைக் கொல்வதா, அரசியை இழப்பதா? என்று எண்ணிக் கடைசியில் அரசியைக் காப்பது தான் முக்கியம் என்று முடிவுக்கு வந்தது.

இப்படி அது வருத்தத்தோடு இருக்கும் போது எங்கோ போயிருந்த குரங்கு அங்கு வந்து சேர்ந்தது. அது முதலை கவலையாய் இருப்பதைப் பார்த்து அதன் துயரத்திற்கு என்ன காரணம் என்று