பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை

169

“நான் உன்னைப் பிரியவே மாட்டேன். ஏனென்றால் நீ எனக்கு மிகச் சுவையான பழங்களை உதிர்த்துக் கொடுத்தாய்" என்று சொல்லியது.

நாள் தோறும் குரங்கு பழங்களை உதிர்த்துக் கொடுக்க, முதலை அதைத் தின்றுகொண்டு அந்த இடத்திலேயே இருந்தது. அது தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்லாததால் அதன் மனைவியான முதலையரசி மிகவும் கவலை கொண்டது. அது தன் தோழியான ஒரு முதலையை அழைத்துக் கணவனிடம் தூது போய் வரும்படி அனுப்பியது. அந்தத் தூதி முதலையரசனிடம் வந்து "மன்னவா, தங்களைக் காணாமல் அரசியார் மெலிந்து போய் விட்டார்கள். அவர்களுடைய காதல் நோய் வெப்பு நோயாக மாறி உடலை இளைக்கச் செய்து விட்டது. தாங்கள் வந்து நோய் தீர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கூறியது.

“ஏ தூதியே, குரங்கோ எனக்கு உயிர் நண்பனாகி விட்டது. அதைப் பிரிந்து வருவதோ என்னால் முடியாது, நீயோ என் மனைவி நோயாய் இருக்கிறாள் என்று சொல்கிறாய். அதைக் கேட்டதும் என் மனமோ மிகவும் வருந்துகிறது. புறப்படவும் முடியவில்லை நான் என்ன செய்வேன்" என்று வாய்விட்டுச் சொல்லி முதலை வருந்தியது.


ப—11


ப–11