பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டகத்தைக் கொன்ற காகம்

51


‘சிவசிவ! நினைப்பதும் பாவம்’ என்று சிங்கம் தன் காதுகளை மூடிக் கொண்டது.

“மன்னவா, ஒரு குடியைக் காப்பாற்ற ஒருவனைக் கொல்லலாம். ஒரு நகரைக் காப்பாற்ற ஒரு குடியைக் கெடுக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு நகரையே அழிக்கலாம். இந்த நீதியைக் கொண்டுதான், பஞ்ச பாண்டவர்கள், தங்கள் மகன் அரவானைப் போர்க்களத்தில் பலியிட்டு வெற்றி அடைந்தார்கள்’ என்று காகம் எடுத்துக் கூறியது.

‘அடைக்கலமாக வந்தவர்களை அழிப்பது சரியல்ல' என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது.

‘அரசே, அடைக்கலமாக வந்ததை நீங்களாகக் கொல்ல வேண்டாம். அதன் ஒப்புதலின் பேரிலேயே அதைக் கொன்று பசி தீரலாம்' என்று காகம் கூறியது. சிங்கம் அதற்குப் பதில் எதுவும் கூற வில்லை. காகம், அது பேசாமல் இருப்பதே ஒப்பியதாகும் என்று எண்ணிக் கொண்டு, நரியையும் புலியையும் கூட்டிக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது.

ஒட்டகம் வந்தவுடன், நான்குமாக மீண்டும் சிங்க மன்னனிடம் வந்தன.

‘அரசே! இந்தக் காடு முழுவதும் இரையே அகப்படவில்லை. என்னைக் கொன்று உண்ணுங்கள்’ என்று காகம் கூறியது.

‘உன்னுடலும் எனக்கோர் உணவாகுமா?' என்று சிங்கம் பதில் கூறியது.