நான்கு நண்பர்கள்
75
உடனே எல்லாப் புறாக்களும் கூடிப் பறந்தன. வலையை எடுத்துக் கொண்டு அவை வானத்தில் பறந்ததைக் கண்ட வேடன் கலங்கிப் போனான். புறாக்கள்தான் அகப்படவில்லை என்றால், வலையும் போச்சே என்று மனம் வருந்தினான்.
'இந்தப் புறாக்கள் எவ்வளவு தூரம்தான் இப்படியே பறந்து ஒடப் போகின்றன. விரைவில் களைப் படைந்து கீழே விழத்தான் நேரிடும். அப்போது அவற்றைப் பிடித்துக் கொள்வதோடு வலையையும் திரும்பப் பெறலாம்' என்று எண்ணிக் கொண்டு அந்த வேடன் அவற்றின் பின்னாலேயே ஓடினான். ஆனால், அவனுக்குத்தான் விரைவில் களைப்பு வந்ததே தவிர அந்தப் புறாக்கள் களைக்கவேயில்லை. அவை வெகு தொலைவில் பறந்துபோய் அவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டன.
என்ன நடக்கிறதென்று பார்ப்பதற்காக இலவ மரத்துக் காகமும் பின்னால் பறந்து சென்று கொண்டேயிருந்தது.
வலையோடு புறாக்கள் பறந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு காடு குறுக்கிட்டது. அதைக் கண்டவுடன் அரசப்புறா, 'எல்லோரும் இங்கே இறங்குங்கள். என் நண்பனான எலி ஒன்று இங்கே இருக்கிறது’ என்று கூறியது. எல்லாப் புறாக்களும் அங்கே இறங்கின.