பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான்கு நண்பர்கள்

83

என்னுடைய சொந்த ஊர் சம்பகாவதி என்பது. அங்கே ஒரு மடத்தில் நான் இருந்து வந்தேன். அந்த மடம் ஒரு சைவத் துறவியுடையது. அந்தச் சைவத்துறவி நாள்தோறும் தெருவில் பிச்சை எடுத்து வந்து, தான் உண்டது போக மீதியை வேறு யாரேனும் பரதேசிகள் வந்தால் கொடுப்பதற்கென்று ஒரு சிறு பாத்திரத்தில் வைத்திருப்பான். அவன் மீத்து வைக்கும் சோற்றை இரவில் நான் வந்து வயிறு புடைக்கத்தின்பேன், அவன் கையில் அகப்படமாட்டேன். இப்படிப் பல நாட்கள் என் வாழ்க்கை இன்பமாக நடந்தது.

ஒரு நாள் அந்த சைவத்துறவியின் மடத்துக்கு இன்னொரு சந்நியாசி வந்திருந்தான். இருவரும் பல விதமான சாத்திரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருந்தார்கள். இரவு வெகு நேரமாகியும் அவர்கள் பேச்சு முடிந்து தூங்கப் போவதாகத் தெரியவில்லை. எனக்குப் பசி பொறுக்க முடியவில்லை. ஆகவே அவர்கள் தூங்கும் முன்னாலேயே அந்தப் பாத்திரத்தில் இருந்த சோற்றைத் தின்னத் தொடங்கினேன். நான் சோறு தின்னும் சத்தம் கேட்டு சைவத்துறவி அதட்டி என்னைத் துரத்தி விட்டான். அப்போது அவனுக்கு ஏதோ ஒரு யோசனை தோன்றியிருக்கிறது.

தன்னோடு பேசாமல் ஏதோ நினைவாய் இருப்பதைக் கண்டு அங்கு அமர்ந்திருந்த சந்நியாசி அவனை நோக்கி, `திடீர் என்று என்ன யோசனை?' என்று கேட்டான்.