பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வஞ்சக நரி

97

‘நீ யார்? உன்னை நான் இதற்கு முன் பார்த்ததாகவே நினைவில்லையே! நீயோ என்னைத் தெரிந்தவன் போல் பேசுகிறாயே?’ என்று மான் அந்த நரியைக் கேட்டது.

“மானே, நானும் இந்தக் காட்டில்தான் வாழ்கிறேன். ஆனால், நான் ஒரு பாவி. எனக்கு உறவினர் யாரும் கிடையாது. தன்னந் தனியாக ஒரு துணையும் இல்லாமல் வீண் வாழ்வே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்று உன்னைக் கண்ட பிறகுதான் என் மனத்தில் மகிழ்ச்சி தோன்றியது. உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டு, உன்னிடமே இருந்துவிட முடிவு செய்து விட்டேன். என்னிடம் நீ இரக்கங் காட்டி அன்பாக நடந்து கொள்ள வேண்டுகிறேன்” என்று நரி பதிலளித்தது.

நரியின் தந்திரமான பேச்சைக் கேட்டு அந்தக் களங்கமில்லாத சின்ன மான்குட்டி மயங்கி விட்டது. அது கூறியதெல்லாம் உண்மையென்று எண்ணி அதைத் தன் நண்பனாக ஏற்றுக் கொண்டு விட்டது. இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து சண்பக மரத்தினடியில் போய் இருந்தன.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்து சேர்ந்த காகம் மான் குட்டியைப் பார்த்து,

'மானே, உன்னுடன் புதிதாக வந்து தங்கியிருப்பவன் யார்?’ என்று கேட்டது.