பக்கம்:படித்தவள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ராசீ



மேலே அவன் தொடர்ந்தான்.

“அவள் ஒருவனை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்” என்றான்.

“அவன் அவளை இழுத்தானா? அவள் அவனை இழுத்தாளா ?” என்று கேட்டேன்.

“இந்த இழுபறி எல்லாம் எனக்குத் தெரியாது. அவள் என்னிடத்தில் இல்லை” என்றான்.

“நல்லதாகப் போச்சு: அவளும் மற்றவளைப் போலத் தூக்கு மாட்டிக் கொண்டு உனக்குத் துயரத்தை உண்டாக்காமல் போய் விட்டாள், உத்தமி” என்றேன்.

“உத்தமி யார் என்று நான் கேட்கவில்லை. இருந்து கெடுத்தவளா இல்லாமல் கெடுத்தவளா என்று நான் கேட்கவில்லை. அடுத்து மற்றொருத்தியை நான் தாலி கட்டினால் அவளாவது தங்குவாளா?” என்று கேட்டான்.

“சட்டப்படி அவள் உன்மனைவி; அவள் இஷ்டப்படி இன்னொருவனுடன் இருந்து பார்க்கிறாள்; கட்டுப்படி இல்லை என்றால் தட்டுத் தடுமாறி உன்னிடம் வரவேண்டியவள் தானே?” என்று ஆறுதல் கூறினேன்.

“அது எப்படித் திரும்புவாள் என்று எதிர்பார்க்கிறீர்?” என்று கேட்டான்.

“ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்; 91வது நாள் அவள் வந்து சேர்வாள்” என்று ஜோசியர் கூறினார்.

அன்று ஆறுதலாகச் சென்றான்; மறுநாளும் வந்து அறுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/44&oldid=1129735" இலிருந்து மீள்விக்கப்பட்டது